கோப்புப் படம்
கோப்புப் படம்

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வால் 25% வரை விற்பனை சரிவு

Published on

புதுச்சேரி: மதுபானங்கள் விலை உயர்வால், கடந்த வாரத்தின் இறுதி நாட்களில் புதுச்சேரியில் 25 சதவீதம் வரை விற்பனை சரிந்துள்ளதாக மது விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரியில் முன்பு மதுபானங்கள் விலை இதர மாநிலங்களை விட குறைவாக இருந்தது. மது அருந்த வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக இங்கு அழகிய வடிவமைப்புடன் கூடிய பெரிய மதுக்கடைகள் நகரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மதுவால், புதுவை அரசின் கலால் துறைக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1,000 கோடி வரை வருவாய் கிடைக்கிறது.

இந்தச் சூழலில் மேலும் வருவாயை அதிகரிக்க முன் எப்போதும் இல்லாத வகையில் மதுபானங்களின் விலையை அண்மையில் புதுச்சேரி கலால் துறை உயர்த்தியது. இதனால் கீழ்மட்ட அளவில் உள்ள மது வகைகள் கூட குவார்ட்டருக்கு ரூ.12 முதல் ரூ.15 வரை உயர்ந்தது. அதிகமாக விற்பனையாகும் ரகங்களின் விலை குவார்டருக்கு ரூ.30 வரை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் மது விற்பனை பாதிக்காது என அரசு கருதியது.

வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் புதுவைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். கடந்த வார இறுதியில் நடந்த விற்பனை தொடர்பாக மதுபான விற்பனையாளர்கள் தரப்பில் இதுபற்றி பேசியபோது, “கடந்த 25 ஆண்டுகளில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள மதுபான விலை உயர்வே அதிகமானது. இந்த விலை உயர்வால் மது வாங்குவதில் சுற்றுலாப் பயணிகளிடம் தயக்கம் உருவாகியுள்ளது.

அரசால் வசூலிக்கப்படும் மதுபான கட்டணம் தாண்டி, மது உரிமை கட்டணமும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால கடந்த 3 நாட்களில் 20 முதல் 25 சதவீதம் வரை மதுபான விற்பனை சரிந்துள்ளது. அடுத்தடுத்த வாரங்களும் இதே நிலை தொடர்ந்தால் கலால் துறையின் வரி வருவாயில் கடும் சரிவு ஏற்படும்” என்று விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in