Last Updated : 22 Jun, 2025 05:07 PM

3  

Published : 22 Jun 2025 05:07 PM
Last Updated : 22 Jun 2025 05:07 PM

தமிழகத்தில் நலிவடைந்து வரும் ஜவுளித் தொழில் - என்னதான் காரணம்?

நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழக ஜவுளித்தொழில் மத்திய அரசு பல ஆண்டுகளாக கோரிக்கைகளை நிறைவேற்றாத காரணத்தால் நலிவடைந்து வருவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஜவுளித்தொழில் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டதாகும். அதிக மக்களுக்கு குறிப்பாக கிராப்புற பெண்கள் அதிகம் ஜவுளித்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இத்துறை பஞ்சுக்கு இறக்குமதி வரி 11 சதவீதம் நீக்குதல், செயற்கை இழை இறக்குமதிக்கு தரக்கட்டுப்பாடு விதிமுறைகளை அகற்றுதல், இந்திய பருத்தி கழகத்தின் கிளையை தமிழ்நாட்டில் தொடங்குதல் போன்ற மிக முக்கிய கோரிக்கைகளை பல ஆண்டுகளாக மத்திய அரசு நிறைவேற்றாததால் தொழில் மிகவும் நலிவடைந்து வருவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின்(சிஸ்பா) கெளரவ செயலாளர் ஜெகதீஷ் சந்திரன் கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் 300 லட்சம் பேல்(ஒரு பேல் 356 கிலோ) பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 150 லட்சம் பேல் பஞ்சு இந்திய பருத்தி கழகத்தால் (சிசிஐ) கொள்முதல் செய்யப்பட்டு நூற்பாலை தொழில்துறையினருக்கு விற்பனை செய்யப்படுகிறது. 70 சதவீதம் தமிழ்நாடு கொள்முதல் செய்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக ‘சிசிஐ’ கிளையை தமிழ்நாட்டில் தொடங்க கோரிக்கை விடுக்கப்படுகிறது.

இன்று வரை தொடங்கப்படவில்லை. தமிழக அரசு ‘செஸ்’ வரி 1 சதவீதம் நீக்கினால் தமிழ்நாட்டில் தொடங்குவோம் என அறிவித்தனர். ஆனால் தமிழக அரசு 1 சதவீத செஸ் வரியை நீக்கி நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை சிசிஐ கிளை தமிழ்நாட்டில் தொடங்கப்படவில் லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பின்(ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறியதாவது: பருத்தி, செயற்கை இழை முதல் ஆடை உற்பத்தி வரை நாட்டில் அதிக வேலை வாய்ப்பையும் அன்னிய செலாவணியையும் வரி வருவாயையும் அளித்து வருகிறது ஜவுளித்துறை. பாலிஸ்டர், விஸ்கோஸ் போன்ற செயற்கை இழைகள் இந்தியாவில் இரண்டு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுப்பாட்டின் உள்ளன. இந்நிறுவனங்கள் பயன் பெறுவதற்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செயற்கை இழைகளுக்கு தரக்கட்டுப்பாடு என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

கார்ப்பரேட் துறையினரின் நலனுக்காக தொழில் கொள்கைகள் அவர்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்கப்படுவது சரியல்ல. செயற்கை இழை ‘QCO BIS’ இறக்குமதி கட்டுப்பாடு காரணமாக 18 முதல் 30 சதவீதம் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ஜவுளித் தொழில்துறையினர் முன்வைத்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாத காரணத்தால் தமிழ்நாட்டில் உள்ள ஜவுளித்தொழில் தள்ளாடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கத்தின் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறியதாவது: பஞ்சுக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பிட்ட சில மாதங்களுக்காவது விலக்கு அளிக்க கோரியும் கண்டுகொள்வதில்லை. பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றினால் தமிழக ஜவுளித்தொழில் நெருக்கடியில் இருந்து மீண்டு வர வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடும் நெருக்கடியில் ஜவுளித் தொழில்: ‘ஆர்டிஎப்’ தலைவர் ஜெயபால் கூறும் போது, தமிழக ஜவுளித்தொழில் துறையினர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அமைச்சரை நேரில் சந்திக்க உதவியதாகவும், அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு தற்போது எந்த பிரச்சினையும் அவர்களுக்கு இல்லை என கோவையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். ‘‘அவர் கூறுவது உண்மையில்லை. அவர் மத்திய அரசிடம் இருந்து எந்த உதவியையும் தமிழக ஜவுளித்தொழில் துறையினருக்கு பெற்றுத் தரவில்லை. நாங்கள் கடும் நெருக்கடியில் உள்ள போது எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என அவர் கூறியிருப்பது முற்றிலும் தவறானது, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x