யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படாது: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படாது: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிக தள்ளுபடி விகித (எம்டிஆர்) கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது: யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் வசூலிக்கப்படும் என்று எழுந்துள்ள ஊகங்கள் முற்றிலும் தவறானது. ஆதாரமற்றது.

இது போன்ற ஆதாரமற்ற ஊக செய்திகள் மக்களை தவறாக வழிநடத்தும். தேவையற்ற பயத்தை உருவாக்கும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, யுபிஐ வாயிலான பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை. இவ்வாறு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எம்டிஆர் என்பது ஒரு வணிகர் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து டிஜிட்டல் வழிகளில் பணம் பெறுவதற்காக வங்கிக்கு செலுத்தும் கட்டணம் ஆகும். வணிக தள்ளுபடி விகிதம் பரிவர்த்தனை தொகையின் சதவீதத்தில் வெளிப்படுத்தப்படுகிறது.

அதிக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து நிதி அமைச்சகம் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனை ரூ.25.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்தைவிட 5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக என்பிசிஐ தரவுகள் தெரிவிக்கின்றன. ஏப்ரலில் யுபிஐ பரிவர்த்தனை மதி்ப்பு ரூ.23.94 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதத்தில் 1,789.3 கோடியாக இருந்த பரிவர்த்தனை மே மாதத்தில் 1,867.7 கோடியாக அதிகரித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in