Published : 12 Jun 2025 04:23 PM
Last Updated : 12 Jun 2025 04:23 PM
ஸ்ரீரங்கம் கோயிலில் பூஜை பொருட்கள் விற்பனை செய்வதற்கான உரிமம் பெறுவதற்கான ஏலத்தில் பங்கேற்க 45 நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன. இதில், முதுநிலை கோயில்களில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் வேண்டும், ஜிஎஸ்டி செலுத்தி இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளதால் ஏலதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள தாயார் சந்நிதி மற்றும் அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் கோயிலின் உப கோயிலான காட்டழகிய சிங்கர் கோயில் ஆகிய இடங்களில் தேங்காய், பூ, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்வதற்கான டெண்டரை, ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ளது.
அதில், டெண்டரில் பங்கேற்க 45 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில், முதுநிலை கோயில்களில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் வேண்டும், ஜிஎஸ்டி செலுத்தி இருக்க வேண்டும் என்பன போன்ற சில நிபந்தனைகளை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்து ஸ்ரீரங்கம் நகர நலச் சங்கத் தலைவர் சுரேஷ் வெங்கடாசலம் கூறியது: ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் சார்பில் கோரப்பட்டுள்ள டெண்டரில் பூஜை பொருட்கள் விற்பனை செய்ய, தமிழகத்தில் உள்ள முதுநிலை கோயில்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் உரிமம் பெற்று கடை நடத்தி இருக்க வேண்டும். வணிக வரித் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் வருமான வரி செலுத்தி இருக்க வேண்டும். கடந்தாண்டு ஜிஎஸ்டி செலுத்தியதற்கான விவரத்தை இணையதளத்தில் சமர்ப்பித்து இருக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கோயில் வாசலில் பூஜை பொருட்கள் விற்க முன்அனுபவம் எதற்கு என தெரியவில்லை. மேலும், மிகக் குறைந்த வருமான உள்ள நிலையில், எப்படி வருமான வரி செலுத்துபவராக இருக்க முடியும்?
சமயபுரம் மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட எந்தக் கோயில்களிலும் இத்தகைய நிபந்தனைகள் இல்லை. குறிப்பிட்ட சிலரே மீண்டும் உரிமம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது என்றார்.
டெபாசிட் தொகையுடன் 18 % ஜிஎஸ்டியால் ஏலம் புறக்கணிப்பு:
இதனிடையே, ஸ்ரீரங்கம் கோயில் ரங்கவிலாச மண்டபத்தில் சக்கரத்தாழ்வார் சந்நிதி, திருவெள்ளரை கோயில், காட்டழகிய சிங்கர் கோயில் ஆகியவற்றுக்கான மணியம் உரிமம் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில் தெற்கு வாசல், வடக்கு வாசல், அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆகிய இடங்களுக்கான முடி சேகரிப்பு உரிமம், அன்பில் ஆலய வளாக கடைகள் ஆகியவற்றுக்கான ஏலம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
டெபாசிட் தொகையுடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்தி ஏலத்தில் பங்கேற்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஏலத் தொகை அதிகமாக இருப்பதாகக் கூறி ஒருவரும் ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதனால் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.
அறநிலையத் துறையின் நிலையான உத்தரவுதான்:
ஸ்ரீரங்கம் கோயிலை பொறுத்தவரை அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தில் இருந்து வரும் உத்தரவுகளை அப்படியே செயல்படுத்துவது வழக்கம். ஏலத் தொகை மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி என்பது இந்து சமய அறநிலையத் துறையின் நிலையான உத்தரவு. ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற முதல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டாலும், மீண்டும் ஏலம் நடைபெறும். எனவே, இப்போது புறக்கணித்தால் அடுத்தடுத்த ஏலங்களில் தொகை குறையும் என்பதால், ஏலதாரர்கள் முதல் ஏலத்தை திட்டமிட்டு புறக்கணித்துள்ளனர் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT