ஏ.சி. வெப்பநிலையை 20 முதல் 28 டிகிரி செல்சியஸுக்குள் பராமரிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனை

ஏ.சி. வெப்பநிலையை 20 முதல் 28 டிகிரி செல்சியஸுக்குள் பராமரிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனை
Updated on
1 min read

புதுடெல்லி: ஏ.சி. இயந்திரங்களின் இயல்பு வெப்பநிலையை 20 முதல் 28 டிகிரி செல்சியஸுக்குள் பராமரிப்பதற்கான நெறிமுறைகளை உருவாக்குவது குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதுகுறித்து மத்திய மின்சாரத் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமான கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏர்கண்டீஷனர் (ஏ.சி.) வெப்பநிலையை தரப்படுத்துவது குறித்து, உற்பத்தியாளர்கள் மற்றும் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். ஆலோசனை முடிந்ததும், அதற்கேற்ப வழிகாட்டு நெறிமுறைகள் இறுதி செய்யப்படும். வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும்போது, அந்தந்த மாநிலங்களின் ஈரப்பதத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என சில மாநிலங்கள் வலியுறுத்தி உள்ளன.

வாகனங்களில் பொருத்தப்படும் ஏ.சி.களை தரப்படுத்துவது தொடர்பாக வாகன உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மின் துறை செயலாளர் பங்கஜ் அகர்வால் கூறும்போது, “நாட்டில் எரிசக்தி திறனை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 1 டிகிரி வெப்பநிலையைக் குறைத்தால்கூட 6% மின்சாரத்தை சேமிக்க முடியும். நாட்டில் கோடிக்கணக்கான ஏ.சி.கள் இயங்குகின்றன. இதுதவிர, ஆண்டுதோறும் புதிய ஏ.சி.கள் தொடர்ந்து வாங்கப்படுகின்றன. அப்படியானால் எவ்வளவு மின்சாரத்தை சேமிக்கலாம் என்பதை கற்பனை செய்து பாருங்கள்” என்றார்.

நாட்டின் எரிசக்தி செயல்திறனை மேம்படுத்துவதற்காக, ஏ.சி.களின் இயல்புநிலை வெப்பநிலையை 20 முதல் 28 டிகிரி செல்சியஸுக்குள் தரப்படுத்துவதற்கான நெறிமுறைகளை உருவாக்கும் பணியில் எரிசக்தி திறன் முகமை (பிஇஇ) ஈடுபட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in