Published : 11 Jun 2025 05:47 AM
Last Updated : 11 Jun 2025 05:47 AM
சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சட்டவிரோதமாக மருந்துகளை விற்பனை செய்த 960 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதன் செயல்பாடுகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும் மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் கண்காணித்து வருகிறது. குறிப்பாக, மருத்துவரின் பரிந்துரையின்றி சில மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
முறைகேடுகளோ, விதிமீறல்களோ கண்டறியப்பட்டால், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதேபோல், மனநல மாத்திரைகள், வலி நிவாரண மருந்துகள், தூக்க மாத்திரைகள், கருத்தடை மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரையில்லாமல் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கடைகளில் சட்டவிரோத விற்பனை நடந்திருப்பதை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் சோதனைகள் மூலம் தெரியவந்தது. மேலும், அடிமைப்படுத்தும் மருந்துகளை தொடர்ந்து விற்பனை செய்து வருபவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பல்வேறு மாவட்டங்களில் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டன. அந்த வகையில், மருந்தகங்கள், மொத்த விற்பனை நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் கேட்டபோது, “மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்வது தவறான செயலாகும். அதிலும், சில முக்கிய மருந்துகளை விற்பனை செய்வது சட்ட விரோதம்.
அதன்படி, கடந்த 2023 மே முதல் தற்போது வரை விதிகளுக்கு புறம்பாக மருந்து விற்பனையில் ஈடுபட்ட 960 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், மருத்துவர்களின் பரிந்துரையின்றி கருத்தடை மாத்திரை, தூக்க மாத்திரை விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்ட 70 மருந்தகங்கள், நிறுவனங்களின் உரிமம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT