தேஜஸ் போர் விமானங்களின் இன்ஜின் விரைவில் விநியோகம்: அமெரிக்காவின் ஜிஇ நிறுவனம் தகவல்

தேஜஸ் போர் விமானங்களின் இன்ஜின் விரைவில் விநியோகம்: அமெரிக்காவின் ஜிஇ நிறுவனம் தகவல்

Published on

புதுடெல்லி: தேஜாஸ் மார்க் -1ஏ ஜெட் இன்ஜின் விநியோகத்தை விரைவுபடுத்தும் வகையில் அவற்றின் தயாரிப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் (ஜிஇ) நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜிஇ நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓவுமான லாரி கல்ப் கூறியுள்ளதாவது: இந்திய விமானப் படையின் ஐந்தாம் தலைமுறை போர் விமான திட்டத்துக்கான ஜெட் என்ஜின்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்ஏஎல்) நிறுவனத்துக்கு தயாரித்து வழங்குவதில் ஜெனரல் எலக்ட்ரிக் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது.

சப்ளையர்களின் திறனை அதிகரிக்க நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இதில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டின் முதல் காலாண்டை விட ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிறுவனத்தின் செயல்திறன் இரட்டை இலக்க அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது.

குறிப்பாக, இந்தியாவின் 5-வது தலைமுறை போர் விமானத் திட்டத்தில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். அமெரிக்கா இந்தியா இடையேயான உறவு பலமாக உள்ளது. அதனால்தான் இந்தியாவின் செயல்பாட்டுக்கு எப்போதும் ஆதரவாக உள்ளோம். இவ்வாறு லாரி கல்ப் தெரிவித்தார்.

போர் விமானங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமான ராணுவ உபகரணங்களைப் பெறுவதில் மிகுந்த தாமதம் ஏற்படுவதாக இந்திய விமானப் படை தளபதி ஏ.பி.சிங் அண்மையில் கவலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் போர் விமானங்களுக்கான இன்ஜின்களை தயாரிப்பதில் வேகம் காட்டி வருவதாக ஜிஇ நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செயல்பாடுகள் பொருத்தமான அளவை எட்டும்போது இந்தியாவில் ஒரு இயந்திர பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தல் (எம்ஆர்ஓ) வசதியை இந்தியாவில் தொடங்க ஜிஇ திட்டமிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in