Published : 09 Jun 2025 02:08 PM
Last Updated : 09 Jun 2025 02:08 PM
சின்னமனூர்: தேனி மாவட்டம் ஜெயமங்கலம், சின்னமனூர், வடுகபட்டி, சில்வார்பட்டி, மார்க்கையன்கோட்டை, வேம்பரளி உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. சக்கை, சைடுமார், இளங்கால், சைடு பறி, முதியால் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன. இந்த வெற்றிலை வகைகள் சின்னமனூர், பெரியகுளம், தேனி சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன.
அங்கு ரகம் வாரியாக பிரிக்கப்பட்டு அடுக்கப்படுகின்றன. இவற்றை வியாபாரிகள் கொள்முதல் செய்து பாண்டிச்சேரி, மதுரை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, கொல்கத்தா, பெங்களூரூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புகின்றனர். சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரும்புச் சத்து உள்ள இந்த வெற்றிலை செரிமானத்துக்கு உதவும் மருத்துவக் குணம் கொண்டது.
கடந்த தலைமுறையினருக்கு வெற்றிலை மெல்லும் பழக்கம் இயல்பாகவே இருந்தது. இதனால் நோய், நொடியின்றி வாழ்ந்தனர். ஆனால், காலப்போக்கில் இப்பழக்கம் குறையத் தொடங்கியது. தேவை வெகுவாக குறைந்ததால் வெற்றிலை விவசாயத்தில் சரிவு ஏற்பட்டது. இதனால் தேனி மாவட்டத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற இந்த விவசாயம் தற்போது 20 ஏக்கர் அளவுக்கு சுருங்கி விட்டது. இதனால் எந்த ரகத்துக்கு தேவை அதிகம் உள்ளதோ, அதை மட்டும் தேர்வு செய்து பயிரிட்டு வருகின்றனர். இருப்பினும் திருவிழா, விசேஷ நிகழ்ச்சிகள் போன்றவை வெற்றிலைக்கு வெகுவாக கைகொடுத்து வருகிறது.
மேலும் கொல்கத்தா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் பீடா பயன்பாடு அதிகம் உள்ளது. அதற்காக இங்கிருந்து அதிகளவில் வெற்றிலை அங்கு சந்தைப்படுத்தப்படுகிறது. இதற்காக சக்கை, திடமான மார் உள்ளிட்ட ரகங்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. இவை திருச்சி, தருமபுரி, கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு மொத்தமாக அனுப்பப்படுகின்றன.
வெற்றிலையின் நேரடிப் பயன்பாடு குறைந்ததால், இவற்றை மதிப்புக் கூட்டும் பொருளாக மாற்றி விற்பனை செய்வதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இதற்காக வெற்றிலை ஜூஸ், வெற்றிலை சாக்லேட் உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.
இதுகுறித்து சின்னமனூர் விவசாயி பழனிவேல் கூறுகையில், கம்பம் பள்ளத்தாக்கில் முன்பு ஆண்டு முழுவதும் வேளாண் பணிகள் நடக்கும். அப்போது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபடுவர். இவர்களுக்கு வெற்றிலை பழக்கம் இருந்ததால் இதன் விற்பனையும் அதிகம் இருக்கும். ஆனால், தற்போதைய நிலை மாறிவிட்டது. பீடா போடும் பழக்கம் வெளிமாநிலத்தில் இருப்பதால் வெற்றிலைக்கு ஓரளவு விலை கிடைத்து வருகிறது என்று கூறினார்.
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் இவற்றை மதிப்புக்கூட்டிய பொருட்களாக மாற்றி அதிகளவில் சந்தைப்படுத்த வேண்டும். அப்போதுதான் வெற்றிலையின் பாரம்பரியத்தை தக்கவைக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT