Published : 09 Jun 2025 02:07 PM
Last Updated : 09 Jun 2025 02:07 PM

மாம்பழத்துக்கு வந்த சோதனை - திருச்சியில் புலம்பும் பாட்டாளிகள்

திருவானைக்காவல் பகுதியில் சாலையோரம் குப்பையில் கொட்டப்பட்டுள்ள அழுகிய மாம்பழங்கள். | படங்கள்: ர.செல்வமுத்துகுமார் |

திருச்சி: மாம்பழ வரத்து அதிகரித்துள்ளதால் திருச்சியில் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கி ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இல்லாதது, வரத்து அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மாம்பழ விலை தற்போது வெகுவாக சரிந்துள்ளது. திருச்சியை பொருத்தவரை துவரங்குறிச்சி, நத்தம், திண்டுக்கல், மணப்பாறை, நாமக்கல், சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து அதிகளவு மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ரங்கம் பகுதியிலிருந்து குறிப்பிட்ட அளவு மாம்பழங்கள் வருகின்றன.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் 50-க்கும் அதிகமான மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை பழக்கடைகள் உள்ளன. ஒரு மாதத்துக்கு முன் சில்லறை வியாபாரத்தில் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்ற பங்கனப்பள்ளி தற்போது 2 கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது. தற்போது மொத்த விலையில் பங்கனப்பள்ளி, ருமேனியா, நீலம் போன்றவை ஒரு கிலோ ரூ.20-க்கும், செந்தூரம், கல்லாமணி, பெங்களூரா ஆகியவை ரூ.15-க்கும், இமாம்பசந்த் ரூ.60- ரூ.80, மல்கோவா ரூ.80, அல்போன்ஸா ரூ.30- ரூ.50, நாட்டுப்பழங்கள் ரூ.10 முதல் ரூ.15 வரையும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுதவிர, திருச்சி மாநகரில் சரக்கு வாகனங்களில் மொத்தமாக மாம்பழங்கள் கொண்டு வரப்பட்டு சில்லறையில் விற்கப்படுகின்றன. அவ்வாறு விற்பனை செய்யப்படும் மாம்பழங்களில் பங்கனப்பள்ளி, இமாம்பசந்த் ஆகியவை கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகின்றன. மாம்பழ வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளதாகவும், மாம்பழங்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியாததால் நஷ்டத்தை சந்திப்பதாகவும் மொத்த வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

காந்தி மார்க்கெட், நெல்பேட்டை தெருவில் மொத்த பழம் மண்டி நடத்தி வரும் சகாயராஜ் கூறியது: இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. பாகிஸ்தானுக்கும் மாம்பழங்களை அனுப்புவதில்லை. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்வது குறைந்துள்ளதால், அல்போன்ஸா, மல்கோவா, இமாம்பசந்த் போன்ற உயர் ரக மாம்பழங்கள் குறைந்த விலைக்கு உள்ளூர் சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன.

இதனால், உள்ளூர் சந்தையில் செந்தூரம், ருமேனியா, கல்லாமணி போன்றசாதா ரக மாம்பழங்களின் விற்பனையில் தேக்கம் ஏற்படுகிறது. திருச்சிக்கு நாள்தோறும் வண்டி ஒன்றுக்கு 2.5 டன் வீதம் 100 வண்டிகளில் மாம்பழங்கள் வருகின்றன. அவற்றை இருப்பு வைத்தாலும் விரைவில் பழுத்துவிடுகின்றன. இதனால், விலையை குறைத்துக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் மொத்த வியாபாரிகளுக்கு உள்ளது’ என்றார்.

மொத்த வியாபாரி முகமது பாரூக் கூறியது: அண்மையில் பெய்த மழையால் மரங்களிலேயே காய்கள் பழுக்கத் தொடங்கிவிட்டன. மரங்களில் காய்களை தேக்கி வைக்க முடியாததால், விவசாயிகள் அவற்றை பறித்துக் கொண்டு வந்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். மாம்பழ வரத்து அதிகரித்துள்ளதால் குடோன்களிலும் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் மொத்த வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்றார்.

திருச்சியில் தள்ளுவண்டியில் மாம்பழ விற்பனை.

ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்த விவசாயி கே.செந்தில்குமார் கூறியது: ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் இமாம்பசந்து மாம்பழம் மட்டும் 30 டன்னும், இதர ரகங்கள் 25 டன்னும் விளைச்சல் இருக்கும். ஆனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பருவம் தவறி பெய்த மழையால், மாமரத்தில் இருந்த பூக்கள் கருகிவிட்டன. மேலும், அண்மையில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மாம்பழங்களில் புழு வைத்துவிட்டது.

எங்களை பொறுத்தவரை இந்த ஆண்டு சுத்தமாக விளைச்சல் இல்லை. ஆனால், தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் மாம்பழ விளைச்சல் அமோகமாக இருக்கிறது. தேவைக்கு அதிகமாக வரத்து இருப்பதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இந்தாண்டு மாம்பழங்களால் பெரிய லாபம் இல்லை என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x