Published : 09 Jun 2025 06:15 AM
Last Updated : 09 Jun 2025 06:15 AM
சென்னை: சென்னை காசிமேடில் வரத்து குறைவால் நேற்று மீன்கள் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.1400-க்கு விற்கப்பட்டது.
தமிழகத்தின் மிகப்பெரிய மீன்பிடி துறைமுகமாக சென்னை காசிமேடு துறைமுகம் உள்ளது. ஆழ்கடல் மீன்கள் விற்பனை அதிகம் நடைபெறும் பகுதியாக காசிமேடு மீன்பிடி துறைமுக மீன் அங்காடி உள்ளது. ஏராளமான விசைப்படகுகளில் பிடிக்கப்படும் ஆழ்கடல் மீன்கள் இங்குதான் ஏலம் விடப்படுகின்றன.
தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த ஏப்.15-ம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கி, ஜூன் 14-ம் தேதிவரை 61 நாட்கள் வரை நீடிக்கிறது. இது வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் பொருந்தும். இதேபோல், அரபிக் கடலிலும் கடந்த ஜூன் 1-ம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது.
தமிழக பகுதியில் மீன்பிடி தடைக்காலமாக இருக்கும்போது, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களிலிருந்து மீன்கள் கொண்டு வந்து காசிமேட்டில் விற்கப்படும். ஆனால் தற்போது இந்திய கடலோரப் பகுதிகள் முழுவதும் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது.
எனவே நாட்டுப் படகுகளில் தூண்டில் போட்டு பிடிக்கப்படும் ஆழ்கடல் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன. இதனால் காசிமேடு மீன் அங்காடியில் மீன்கள் விலை நேற்று கடுமையாக உயர்ந்தது. வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1400 ஆக உயர்ந்திருந்தது. இதேபோல் சீலா ரூ.800, சங்கரா ரூ.700, இறால் ரூ.400 என விலை உயர்ந்துள்ளது. வரும் 15-ம் தேதிக்குப் பிறகு விலை குறைய வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT