Published : 08 Jun 2025 07:37 AM
Last Updated : 08 Jun 2025 07:37 AM
இந்தியாவில் 11 ஆண்டில் பரம ஏழைகள் எண்ணிக்கை 27% - லிருந்து 5.3% ஆக குறைந்துள்ளதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஏழ்மை நிலை தொடர்பாக உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2011-12 நிதியாண்டில் இந்தியாவில் பரம ஏழைகள் எண்ணிக்கை 34.44 கோடியாக இருந்தது. இது 2022-23 நிதியாண்டில் 7.52 கோடியாகக் குறைந்துள்ளது. 11 ஆண்டில் 26.9 கோடி பேர் பரம ஏழைகள் என்ற நிலையில் இருந்து மீண்டுள்ளனர். அதாவது 11 ஆண்டுகளுக்கு முன்பு 27.1 சதவீதமாக இருந்த பரம ஏழைகளின் விகிதம் இப்போது 5.3% ஆக குறைந்துள்ளது.
கடந்த 2011-12-ல் நாட்டின் ஒட்டுமொத்த ஏழைகளில் 65 சதவீதம் பேர் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பிஹார், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 2022-23-ல் ஏழைகள் எண்ணிக்கை குறைந்ததற்கு (3-ல் 2 பங்கு) இந்த மாநிலங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன.
தினசரி 2.15 டாலருக்கும் குறைவாக செலவிடுவோர் பரம ஏழைகள் என உலக வங்கி வரம்பு நிர்ணயித்திருந்தது. இது 2021-ல் 3 டாலராக உயர்த்தப்பட்டது. ஆனாலும், இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 5.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அதேநேரம், உலக அளவில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு 71.3 கோடியாக இருந்த பரம ஏழைகள் எண்ணிக்கை இப்போது 83.8 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இந்த எண்ணிக்கை 9-லிருந்து 10.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நரேந்திர மோடி பிரதமரான பிறகு, அனைவருக்கும் வீடு, ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்கு, ஆயுஷ்மான் பாரத் காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் வறுமை நிலை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT