Published : 07 Jun 2025 08:55 PM
Last Updated : 07 Jun 2025 08:55 PM
திருப்பூர்: அரசு பேச்சுவார்த்தையின்படி கூலி உயர்வை அமல்படுத்த வலியுறுத்தி வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை விசைத்தறியாளர்கள் 3 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் சோமனூர் சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது. சங்க தலைவர் ச.ஈ.பூபதி தலைமை வகித்தார். அவிநாசி சங்க தலைவர் என்.எம்.முத்துசாமி, புதுப்பாளையம் சங்க தலைவர் வி.நடராஜ், கண்ணம்பாளையம் சங்க தலைவர் ஆர்.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேச்சுவார்த்தைப்படி சோமனூர் பகுதி ரகத்துக்கு 15 சதவீதமும், இதர பகுதி ரகங்களுக்கு 10 சதவீதமும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 3 நாட்கள் அவிநாசியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுமென தீர்மானிக்கப்பட்டது.
அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி முதல் முன் தேதியிட்டு முழுமையாக கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT