Last Updated : 07 Jun, 2025 05:06 PM

 

Published : 07 Jun 2025 05:06 PM
Last Updated : 07 Jun 2025 05:06 PM

நகைக் கடன் மதிப்பு 75%-ல் இருந்து 85% ஆக உயர்வு - யாருக்குப் பொருந்தும்?

சென்னை: ரூ.2.5 லட்சம் வரையிலான சிறிய தங்க நகைக் கடன்களுக்கான கடன் மதிப்பு (LTV) தொகை 75%-ல் இருந்து 85% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட தகவல்: “தங்க நகைக் கடன் தொடர்பாக முன்னதாக வெளியான வழிகாட்டுதல்கள் ஒரு வரைவு மட்டுமே; அது இறுதியானது அல்ல. அந்த வரைவு வழிகாட்டுதல்களில் புதிதாக எதுவும் இல்லை. இது கடந்த கால விதிமுறைகளின் ஒருங்கிணைப்புதான். நாங்கள் அதை மீண்டும் உருவாக்கியுள்ளோம். தெளிவு இல்லாததால் சில ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் (REs) அதை செயல்படுத்தவில்லை என்பது கவனிக்கப்பட்டது. இப்போது எல்லாம் கருப்பு வெள்ளையில் இருப்பதால்தான் எங்களுக்கு கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன..

தங்க நகைகளை வாங்கியதற்கான ரசீது இல்லாத நிலையில், ஒருவர் சுய அறிவிப்பை வழங்க முடியும் என்பதையும், அதற்காக கவலைப்படத் தேவையில்லை என்பதையும் இந்த வரைவு தெளிவுபடுத்துகிறது. நகைக் கடன் மதிப்பீட்டில் ரூ.2.5 லட்சம் வரையிலான சிறிய கடன்களுக்கு இது பொருந்தாது. இறுதி பயன்பாடு குறித்து கண்காணிப்பதற்காகவே இந்த நடைமுறைகள் திட்டமிடப்படுகிறது.

தங்க நகைக் கடன் மதிப்பு (LTV) என்பது நுகர்வு கடன்களுக்குப் பொருந்தும், மற்றவற்றுக்குப் பொருந்தாது. இப்போது தங்க நகைக் கடன் மதிப்பு 75 சதவீதமாக உள்ளது. அதனை ஒரு கடனாளிக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவான சிறிய கடன்களுக்கான தங்க நகைக் கடன் மதிப்பை வட்டி உட்பட 85% ஆக உயர்த்தியுள்ளோம். இறுதி வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்போது இவை குறித்து மேலும் தெளிவு ஏற்படும்" என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

விதிமுறை வரைவும், அரசு பரிந்துரையும் - முன்னதாக, முறை​கேடு​களை தடுக்கும் நோக்கில், வங்​கி​களில் தங்க நகை கடன் பெறும் விதி​களை கடுமை​யாக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஏப்​ரல் மாதம் புதிய வரைவு கொள்கையை ரிசர்வ் வங்கி வெளி​யிட்​டது. அதன்படி, கடன் - மதிப்பு விகிதம் 75% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.100 மதிப்புள்ள தங்க நகைகளை அடமானம் வைத்தால், அதிகபட்சம் ரூ.75 மட்டுமே கடனாக பெற முடியும். இதுவரையில் நகையின் மதிப்பீட்டில் சுமார் 90% வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. இந்த விதியை அமல்படுத்தும்போது, கடன் தொகை கணிசமாக குறையும்.

புதிய விதிமுறைகளின்படி கடன் வாங்குபவர்கள் அடமானம் வைக்கப்படும் நகைக்கு, தான் உரிமையாளர் என்ற ஆதாரத்தை வழங்க வேண்டும். நகையின் உரிமை சந்தேகத்துக்குரியதாக இருந்தால் கடன் வழங்கப்படாது. அசல் ரசீதுகள் இல்லாதபட்சத்தில் கடன் பெறுபவர்கள் இந்த நகை தங்களுக்கு எப்படி உரிமையானது என்பதை விளக்கும் வகையில் ஒரு அறிக்கை தர வேண்டும்.

கடன் வழங்குபவர்கள், தாங்கள் பெறும் நகைகளின் தூய்மை, எடை மற்றும் மதிப்பு குறித்த சான்றிதழை வழங்க வேண்டும். அடமானம் வைக்கப்படும் நகையின் படத்தையும் இணைக்க வேண்டும். தங்க நகைகள், ஆபரணங்கள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே தங்க நகைக் கடனுக்கு பிணையமாக தகுதியுடையவை. ஒரு கடனாளி அடகு வைக்கும் தங்க நகைகளின் மொத்த எடை 1 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிணையமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தங்கம், 22 காரட் தங்கத்தின் விலையின் அடிப்படையில் மதிப்பிடப்படும் என்று பல விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

இந்த வரைவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மத்திய நிதி​ அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனின் வழி​காட்​டு​தலின்கீழ், ரிசர்வ் வங்​கிக்கு நிதி அமைச்​சகம் அறிவுறுத்தல்களை வழங்கியது. அதில், ‘ரூ.2 லட்​சத்​துக்​கும் குறை​வாக கடன் வாங்​குபவர்​களுக்கு விரை​வான மற்​றும் எளி​தான கடன் அணுகலை உறுதி செய்ய வேண்டும். அதற்​காக இந்த கடுமை​யான விதி​முறை​களில் இருந்து விலக்கு அளிக்​கப்பட வேண்​டும். மேலும், கடன் வழங்​குநர்​கள் புதிய விதி​முறை​களுக்கு மாற ஏது​வாக, இந்த புதிய விதி​களை 2026 ஜனவரி 1-ம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று பரிந்​துரைக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கி தற்​போது பொது​மக்​கள் மற்​றும் வங்​கி​களிட​ம் இருந்து வந்துள்ள கருத்​து​களை மதிப்​பாய்வு செய்து வரு​கிறது. புதிய வி​தி​களை செயல்​படுத்​து​வது குறித்த தனது இறுதி முடிவை ரிசர்வ்​ வங்​கிவிரைவில் அறிவிக்​கும்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது. இந்தப் பின்புலத்தில்,

சற்றே குறைந்த அளவில் நகைகளை அடமானம் வைப்போருக்கு, அதாவது ரூ.2.5 லட்சம் வரையிலான தங்க நகைக் கடன்களுக்கான கடன் மதிப்பு (LTV) தொகை 75%-ல் இருந்து 85% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x