Published : 07 Jun 2025 07:07 AM
Last Updated : 07 Jun 2025 07:07 AM

5 ரூபாய் இந்திய பிஸ்கெட் காசாவில் ரூ.2,400-க்கு விற்பனை

புதுடெல்லி: இந்தியாவில் ரூ.5-க்கு விற்பனை செய்யப்படும் பார்லே-ஜி பிஸ்கெட், போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் ரூ.2,400 விற்பனை செய்யப்படுகிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் போரை தொடர்ந்து காசாவுக்குள் செல்லும் நிவாரண உதவிகளை இஸ்ரேல் கட்டுப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு மார்ச் 2 முதல் மே 19 வரை கிட்டத்தட்ட முழுமையான முற்றுகையை காசா எதிர்கொண்டது. மனிதாபிமானப் பொருட்கள் ஏற்றி வரும் லாரிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்பட்டன. அவையும் கடும் சர்வதேச அழுத்தத்திற்கு பிறகே அனுமதிக்கப்பட்டன.

மனிதாபிமான உதவிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் பறிமுதல் செய்து ஆயுதம் ஏந்துவதாக குற்றம் சாட்டும் இஸ்ரேல், வழக்கமான ஐ.நா. உணவு விநியோகங்களை நிறுத்தியது. அதற்கு பதிலாக, மே 27-ல் சர்ச்சைக்குரிய மாற்று திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி ரஃபாவில் உள்ள எஸ்டிஎப்1 என்ற வினியோக தளம் மூலம் மனிதாபிமானப் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் ரூ.5 மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் பார்லே-ஜி பிஸ்கட் காசாவில் 500 மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. காசாவில் இருந்து சமீபத்தில் வைரலான ஒரு பதிவில் ஒருவர், 1.5 யூரோவிலிருந்து 24 யூரோக்களுக்கு மேல் (ரூ.2,432) உயர்ந்த பார்லே-ஜி பிஸ்கெட்டை நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பெற்றதாக கூறுகிறார்.

காசாவில் பிஸ்கெட் மட்டுமல்ல. மற்ற அத்தியாவசியப் பொருட்களும் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஜூன் 6-ம் தேதி விலை நிலவரப்படி வடக்கு காசாவில் 1 கிலோ சர்க்கரை ரூ.4,914 ஆகவும் 1 லிட்டர் சமையல் எண்ணெய்: ரூ.4,177 ஆகவும் உள்ளது. இதுபோல் 1 கிலோ உருளைக்கிழங்கு ரூ.1,965 ஆகவும் 1 கிலோ வெங்காயம் ரூ.4,423 ஆகவும் 1 கப் காபி ரூ.1,800 ஆகவும் இருந்தது.

இதுகுறித்து காசாவில் பணிபுரியும் 31 வயது மருத்துவர் காலித் அல்ஷாவா கூறுகையில், “இந்த விலை உயர்வுக்கு சப்ளையர்களோ, வரி வதிப்போ காரணம் அல்ல. இந்தப் பொருட்கள் மனிதாபிமான உதவியாக காசாவுக்குள் இலவசமாக வருகின்றன. ஆனால் குறைந்த நபர்கள் மட்டுமே அவற்றை பெறுகின்றனர். பற்றாக்குறை காரணமாக இவை கருப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

3 மாதங்களுக்கு மேல் எல்லைகள் மூடப்பட்டு மிகவும் அடிப்படைத் தேவைகள் மட்டும் மிகக் குறைந்த அளவில் விநியோகிக்கப்படுகின்றன. எனவே, சில பொருட்களை சிலர் மட்டுமே பெற்றாலோ அல்லது கொள்ளை சம்பவங்கள் நடந்தாலோ இந்த உணவுப் பொருள் மிக அதிக விலைக்கு, கட்டுப்படியாகாத விலையில் விற்கப்படுகின்றன” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x