அதிபர் ட்ரம்ப் - மஸ்க் மோதல் காரணமாக டெஸ்லா பங்கு விலை வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு

அதிபர் ட்ரம்ப் - மஸ்க் மோதல் காரணமாக டெஸ்லா பங்கு விலை வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14 சதவீதம் வீழ்ச்சியடைந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டதில் இருந்தே அவரது தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். ட்ரம்ப் மீண்டும் அதிபர் ஆனதும், அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட துறையை எலான் மஸ்க் கவனித்தார்.

இந்நிலையில் அமெரிக்க அரசின் பட்ஜெட் தயாரானது. இதில் எலான் மஸ்க் தலைமையிலான குழு பரிந்துரைந்த விஷயங்கள் இடம் பெறவில்லை. ஏராளமான வரிச்சலுகைகள், அமெரிக்க ராணுவ செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு , மின்சார வாகனங்களுக்கான 7,500 டாலர் மானியம் ரத்து போன்ற அம்சங்களால், எலான் மஸ்க் ஏமாற்றம் அடைந்தார். இதனால் அவர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார். அதிபர் ட்ரம்பின் பட்ஜெட் குறித்தும் விமர்சித்தார்.

இதற்கு சமூக ஊடகத்தில் பதில் அளித்த அதிபர் ட்ரம்ப், ‘‘மின்சார வாகனங்களுக்கான மானியம் பட்ஜெட்டில் ரத்து செய்வதால், எலான் மஸ்க் கோபம் அடைந்துள்ளார். பட்ஜெட்டில் பல லட்சம் பணத்தை சேமிப்பதற்கான ஒரே வழி எலான் மஸ்க் நிறுவனங்களுக்கு வழங்கும் மானியங்களையும், அமெரிக்க அரசு செய்துள்ள ஒப்பந்தங்களையும் நிறுத்துவதுதான்’’ என எலான் மஸ்க்குக்கு மிரட்டல் விடுத்தார். இந்த வார்த்தை மோதல் நீண்டு கொண்டே செல்கிறது.

வெள்ளை மாளிகையில் சுதந்திரமாக திரிந்த தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு, அதிபர் ட்ரம்ப்புடன் இந்தளவு கருத்து வேறுபாடு ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இருவர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 150 மடங்கு லாபத்தில் விற்ற, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14 சதவீதம் வீழ்ந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 621 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. டெஸ்லா கார் நிறுவனத்தின் ஆண்டு லாபம் 1.2 பில்லியன் டாலர் அளவுக்கு குறையலாம் என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in