Published : 04 Jun 2025 07:16 AM
Last Updated : 04 Jun 2025 07:16 AM
சென்னை: பிரபல பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய சேமிப்புக் கணக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
என்ஆர்இ கணக்கு எனப்படும் இது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் வருமானத்தை வசதியாக நிர்வகிக்கவும், பரிமாற்றம் செய்யவும் பயன்படும் ஒரு சேமிப்புக் கணக்கு. இந்த பிரத்யேக சேமிப்பு கணக்கு வகைகளையும், ப்ரீமியம் டெபிட் கார்டுகளையும் இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய திட்டங்களை இவ்வங்கியின் செயலாக்க இயக்குநர்கள் மற்றும் முதுநிலை நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான பினோத் குமார் அண்மையில் தொடங்கி வைத்தார். இந்த புதிய திட்டங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களின் தேவைகளையும், மாறிவரும் நிதிசார் வாழ்க்கை முறைகளையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தியன் வங்கியின் இன்ட் டி எலைட், இன்ட் ப்ரீமியம், இன்ட் ப்ளஸ் (IND D’Elite, IND Premium, IND Plus) ஆகிய உயர் அடுக்கு டெபிட் கார்டுகளை உள்ளடக்கியதாக இத்திட்டங்கள் வெளி வருகின்றன. விமான நிலைய லவுஞ்ச் பகுதிக்கு அணுகு வசதி, தனிநபர் விபத்து காப்பீடு மற்றும் பிரத்யேக லாயல்டி சலுகைகள் உட்பட பல்வேறு வகையான தனித்துவமான ஆதாயங்களை இந்த டெபிட் கார்டுகள் வழங்குகின்றன.
இதுகுறித்து, இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் பினோத் குமார் கூறும்போது, ``வசதி, பாதுகாப்பு மற்றும் மதிப்பு ஆகிய அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் உயர்தர டிஜிட்டல் வங்கி தீர்வுகளை வெளிநாட்டு வாழ் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் உறுதியுடன் இருக்கிறோம். வங்கிக்கும் உலகளாவிய இந்திய சமூகத்துக்கும் இடையே நிலவும் நல்லுறவை மேலும் மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்" என்றார். இத்தகவல் இந்தியன் வங்கி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT