Last Updated : 03 Jun, 2025 09:10 PM

2  

Published : 03 Jun 2025 09:10 PM
Last Updated : 03 Jun 2025 09:10 PM

பக்ரீத் பண்டிகை: வாணியம்பாடி ஆட்டு சந்தையில் ரூ.4 கோடிக்கு வர்த்தகம்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாணியம்பாடி ஆட்டு சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது வியாபாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஜூன் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகையை கொண்டாட இஸ்லாமியர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.

வாரந்தோறும் நடைபெறும் ஆட்டு சந்தையில் வாணியம்பாடி மட்டும் அல்லாமல் மாவட்டத்தின் பிற பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான ஆட்டு வியாபாரிகள் தங்களது வளர்ப்பு ஆடுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை ஆட்டு சந்தையில் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதல் ஆடுகள் கொண்டு வரப்பட்டன. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நிம்மியப்பட்டு ஆட்டு சந்தையில் 800-க்கும் குறையாத ஆடுகள் விற்பனையாகும். அதாவது, ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனையாகும்.

இந்நிலையில், பக்ரீத் பண்டிகை வரும் சனிக்கிழமை (ஜூன் 7-ம் தேதி) கொண்டாட இருப்பதால் வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக அதாவது 1,800 ஆடுகள் இன்று (நேற்று) விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதால் ஆடு வியாபாரம் அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதல் ஆடுகள் கொண்டு வரப்பட்டன.

சிறிய வகை ஆடுகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரத்துக்கும், நடுத்தர ஆடுகள் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையிலும், அதிக எடை கொண்ட பெரிய வகை ஆடுகள் ரூ.10 ஆயிரத்துக்கும் அதற்கு மேல் விலை வைத்து விற்பனையானது.

காலை 6 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் அதிக அளவிலான ஆடுகள் விற்பனையானதால் நண்பகல் 12 மணிக்கு பெரும்பாலான ஆடுகள் விற்பனையானது. ஒரே நாளில் ரூ.4 கோடி வர்த்தகம் நடைபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x