ரூ.6,181 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் இன்னமும் மக்கள் வசம்: ரிசர்வ் வங்கி தகவல்

ரூ.6,181 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் இன்னமும் மக்கள் வசம்: ரிசர்வ் வங்கி தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், திங்கள்கிழமை (ஜூன் 2, 2025) நிலவரப்படி ரூ.6,181 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்கள் வசம் உள்ளன என்று அதிகாரபூர்வ தரவுகள் வெளியாகியுள்ளன.

மே 19, 2023 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மே 19, 2023 அன்று ரூ.3.56 லட்சம் கோடியாக புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, மே 31, 2025 அன்று ரூ.6,181 கோடியாகக் குறைந்துள்ளது.

அதேபோல மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 98.26% திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இருப்பினும் 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து சட்டபூர்வமானவை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும் அல்லது மாற்றும் வசதி அக்டோபர் 7, 2023 வரை அனைத்து வங்கிக் கிளைகளிலும் இருந்தது. அதன்பிறகு ரிசர்வ் வங்கியின் 19 வெளியீட்டு அலுவலகங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். அக்டோபர் 9, 2023 முதல், ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்கள் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வதற்காக ஏற்றுக் கொள்கின்றன.

மேலும், மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க, நாட்டுக்குள் உள்ள எந்த தபால் நிலையத்திலிருந்தும் ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களுக்கு 2,000 ரூபாய் நோட்டுகளை அனுப்பலாம் என்ற வசதியும் இப்போது உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in