நகைக் கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை!

நகைக் கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை!
Updated on
1 min read

புதுடெல்லி: வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் தங்க நகைக் கடன் பெறுவது தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

தங்கம் ஆடம்பர பொருளாக மட்டும் அல்லாமல், மக்களின் அவசர பணத் தேவையை பூர்த்தி செய்கிறது. குறிப்பாக வங்கிகளில் தங்க நகைகளை அடமானமாக வைத்து குறைந்த வட்டியில் மக்கள் எளிதில் கடன் பெற முடியும். இந்நிலையில், ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு தங்க நகைக் கடன் வழங்குவது தொடர்பான 9 புதிய விதிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த வரைவு அறிக்கை இந்தியா முழுவதும் நகைக் கடன் சார்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். நகைக் கடன் சார்ந்த கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்மையில் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், நிதி அமைச்சகம் நகைக்கடன் பெறுவது தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

அதன்படி, ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கலாம் என நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. மேலும், இதுபோன்ற புதிய விதிமுறைகளை கள அளவில் செயல்படுத்துவதற்கு கால அவகாசம் தேவைப்படும். அதனால் ஜனவரி 1, 2026 முதல் இந்த விதிமுறைகளை செயல்படுத்தலாம் என நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

வரைவு வழிகாட்டுதல் குறித்து பெறப்பட்ட கருத்துகளை ரிசர்வ் வங்கி மதிப்பாய்வு செய்து வருவதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை எக்ஸ் தள பதிவில் நிதி அமைச்சகம் பகிர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in