ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்தில் இந்திய பொருளாதாரம்: நிதி ஆயோக் சிஇஓ சொல்வது என்ன?

ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்தில் இந்திய பொருளாதாரம்: நிதி ஆயோக் சிஇஓ சொல்வது என்ன?
Updated on
1 min read

ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்திய பொருளாதாரம் உலகளவில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பிவிஆர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக்கின் 10-ஆவது நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணியம் இதுகுறித்து மேலும் கூறியதாவது: ஒட்டுமொத்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது. இதன் காரணமாக 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டியுள்ளது.

உலக பொருளாதார வரிசையில் தற்போது அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஏற்கெனவே அந்த இடத்தில் இருந்த ஜப்பான் தற்போது இந்தியாவுக்கு பின்தள்ளப்பட்டு 5-வது இடத்தில் உள்ளது.

திட்டமிடப்பட்ட மற்றும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய நடவடிக்கைகளில் நாம் உறுதியுடன் செயல்பட்டால் இன்னும் இரண்டரை அல்லது 3 ஆண்டுகளில் உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க முடியும்.

சொத்துக்களை பணமாக்குவதற்கான இரண்டாம் சுற்று திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிக்கை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும். இவ்வாறு சுப்ரமணியம் தெரிவித்தார்.

இந்தியா உள்ளிட்ட பிறநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, “ வரி விகிதம் எப்படி இருக்கும் என்பது நிச்சயமற்றது. இருப்பினும், உலகளவில் மலிவான விலையில் பொருட்களை தயாரிப்பதற்கு சிறந்த இடமாக இந்தியா இருக்கும்" என்றார் நிதி ஆயோக் சிஇஓ சுப்ரமணியம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in