என்ஓசி நடைமுறை விவகாரம்: வங்கிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

என்ஓசி நடைமுறை விவகாரம்: வங்கிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

‘வாங்கிய கடனை முழுமையாக திருப்பி செலுத்திய பிறகும், வேறொருவர் வாங்கிய கடனுக்கு ஜாமீன் உத்தரவாதம் அளித்திருந்தால் நிலுவை இல்லை என்பதற்கான சான்று (என்ஓசி) அளிக்க மறுக்கக்கூடாது’ என வங்கி நிர்வாகங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலாஜி என்பவர் தனியார் வங்கி ஒன்றில் தனது டேங்கர் லாரிக்காக கடன் பெற்றிருந்தார். வாங்கிய கடன் தொகையை வட்டியும், முதலுமாக முறையாக திருப்பி செலுத்திய நிலையில், அதற்கான நிலுவை இல்லை என்பதற்கான சான்று (என்ஓசி) வழங்கும்படி வங்கி நிர்வாகத்திடம் கோரினார். ஆனால் அதே வங்கியில் லீலாவதி என்பவர் வாகனத்துக்காக வாங்கிய கடன் தொகைக்கு பாலாஜி, ஜாமீன் உத்தரவாதம் அளித்துள்ள தைக் காரணம் காட்டி, அவருக்கு என்ஓசி வழங்க முடியாது என வங்கி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் தனது வாகனத்துக்காக வாங்கிய கடனை வட்டியும், முதலுமாக முழுமையாக திருப்பி செலுத்திய பிறகும், வேறொருவர் வாங்கிய கடனுக்கு அவர் ஜாமீன் உத்தரவாதம் அளித்திருந்தார் என்பதற்காக அவருக்கு நிலுவையில்லா சான்று (என்ஓசி) அளிக்க முடியாது என வங்கி நிர்வாகம் மறுப்பது ஏற்புடையதல்ல. அவருக்கு நிலுவையில்லா சான்று வழங்குவதுடன், டேங்கர் லாரி தொடர்பான ஆவணங்க ளையும் திருப்பி வழங்க வேண்டும்.

பொதுவாக ஒருவர் வாங்கும் கடனுக்கு மற்றொருவர் ஜாமீன் உத்தரவாதம் அளி்த்தார் என்றால், கடன் பெற்ற நபர் தவணையை முறையாக திருப்பி செலுத்த தவறும்பட்சத்தில் தான் உத்தரவாதம் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே நேரம் உத்தரவாதம் அளித்த நபர், தான் பெற்ற கடன் தொகையை முழுமையாக அடைத்துவி்ட்டால், அந்தக் கடனுக்குரிய நிலுவை இல்லை என்பதற்கான சான்றிதழை வழங்க முடியாது என வங்கி நிர்வாகங்கள் சட்ட ரீதியாக மறுக்க முடியாது. இவ்வாறு உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in