தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு: பவுன் ரூ.71,000-த்தை தாண்டியது

தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு: பவுன் ரூ.71,000-த்தை தாண்டியது
Updated on
1 min read

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,760 அதிகரித்து ரூ.71,440-க்கு விற்பனையானது. இதனால், நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பதற்றம், அமெரிக்க அதிபர் டிரம்பின் பொருளாதார போர் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரித்தது. இதனால், கடந்த மாதம் 22-ம் தேதி ஒரு பவுன் ரூ.74,320 ஆக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.

பின்னர், தங்கம் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. கடந்த 15-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.68,660-க்கு விற்பனை செய்யப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது.

இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. இதன்படி, தங்கம் விலை நேற்று அதிகரித்தது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.220 அதிகரித்து ரூ.8,930-க்கும், ஒரு பவுன் ரூ.1,760 அதிகரித்து ரூ.71,440-க்கும் விற்பனையானது.

இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.77,928-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரு பவுன் மீண்டும் ரூ.71 ஆயிரத்தை தாண்டி உள்ளது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, நகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற நிலை, கரோனா வைரஸ் மீ்ண்டும் பரவ தொடங்கி இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது’’ என்றனர்.

வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.108-ல் இருந்து ரூ.3 அதிகரித்து ரூ.111-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in