காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைப்பு
Updated on
1 min read

மேட்டூர்: தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கோடை மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக காற்றாலையில் மின்னுற்பத்தி அதிகரித்துள்ளது. இதனையடுத்து, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மூன்றில் ஒரு பங்குதான் மின் உற்பத்தி நடந்து வருகிறது.

தமிழகத்தில் மேட்டூர், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோடை காலத்தில் மின்சார தேவை அதிகரிக்கும் போது, அனல் மின் நிலையங்கள், முழு திறனுடன் மின் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்சாரப் பயன்பாடு குறைந்துள்ளது. அதே நேரத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் உற்பத்தி குறைக்கப்பட்டது. மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் 840 மெகா வாட் மின்சாரமும், 2-வது பிரிவில் 600 மெகா வாட் மின்சாரமும் என மொத்தமாக 1,440 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்நிலையில், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின்னுற்பத்தி தற்போது மூன்றில் ஒரு பங்கு தான் செய்யப்படுகிறது.

இது குறித்து பேசிய அனல் மின் நிலைய அதிகாரிகள், “தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மே மாதம் தொடக்கம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது, வீடு, அலுவலகம், தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மின்சார பயன்பாடு அதிகரித்தது. இதனால், அனல் மின் நிலையங்கள் முழு திறனுடன் இயக்கப்பட்டு, மின்னுற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வந்தது. தமிழகத்தில் கோடை மழையின் தாக்கத்தால் பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் வீடுகள், அலுவலகங்களுக்கான மின்சார பயன்பாடும் சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில், கோடை மழையால் காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட பகுதிகளி ல் காற்றாலையில் மின்னுற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அனல் மின் நிலையங்களில் மின்னுற்பத்தி குறைக்கப் பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத் தின் முதல் பிரிவில் உள்ள 4 அலகுகளில், 3 அலகில் மின்னுற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. 2வது அலகில் 160 மெகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

இதேபோல், அனல் மின் நிலையத்தின் 2-வது பிரிவில் 600 மெகா வாட்டுக்குப் பதிலாக, 360 மெகா வாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்படி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் 1,440 மெகா வாட்டுக்குப் பதிலாக, தற்போது 520 மெகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, குறைவான அளவில் வைத்து மின் உற்பத்தி நடக்கிறது. மின்சார பயன்பாடு அதிகரிக்கும் போது, மீண்டும் மின் உற்பத்தி அதிகரிக்கப்படும்” என்று அதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in