துருக்கி, அஜர்பைஜான் வரிசையில் அமெரிக்க சுற்றுலாவுக்கு முன்பதிவை நிறுத்துங்கள்: பிரபல முதலீட்டாளர் வேண்டுகோள்

துருக்கி, அஜர்பைஜான் வரிசையில் அமெரிக்க சுற்றுலாவுக்கு முன்பதிவை நிறுத்துங்கள்: பிரபல முதலீட்டாளர் வேண்டுகோள்
Updated on
1 min read

புதுடெல்லி: துருக்கி, அஜர்பைஜான் வரிசையில் அமெரிக்க சுற்றுலாவுக்கான முன்பதிவை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரபல முதலீட்டாளர் பயண நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரபல முதலீட்டாளரும் முதலீட்டு ஆலோசனை நிறுவனமான ஜிகுவான்ட் இன்வெஸ்டெக் நிறுவனருமான ஷங்கர் ஷர்மா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மேக் மை ட்ரிப், ஈஸ் மை ட்ரிப் உள்ளிட்ட அனைத்து பயண ஏற்பாட்டு நிறுவனங்களும் அமெரிக்க சுற்றுலாவுக்கான முன்பதிவை உடனடியாக நிறுத்த வேண்டும். நம்முடைய எதிரி நாட்டுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் ஒரு நாட்டுக்கு நாம் சுற்றுலா செல்லக் கூடாது” கூறியுள்ளார்.

சமீபத்தில் இந்தியா மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு துருக்கியும் அஜர்பைஜானும் ஆதரவு அளித்தன. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வணிக ரீதியிலான தொடர்பையும் துண்டிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்தனர்.

இதனால், துருக்கி மற்றும் அஜர்பைஜான் செல்வதற்காக மேக்மை ட்ரிப், கிளியர் ட்ரிப் மற்றும் இக்சிகோ உள்ளிட்ட பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் மூலம் ஏற்கெனவே செய்திருந்த முன்பதிவை இந்தியர்கள் ரத்து செய்தனர். இதுபோல, மேற்கண்ட 2 நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அந்த பயண நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்ததுடன், முன்பதிவையும் நிறுத்தி வைத்துள்ளன.

இந்நிலையி்ல், 304 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணையை துருக்கிக்கு விற்பதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில், அந்த நாட்டுக்கான சுற்றுலா முன்பதிவை ரத்து செய்ய வேண்டும் என ஷர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in