சென்னையில் மின்சார பேருந்துகளை ஜூனில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை

சென்னையில் மின்சார பேருந்துகளை ஜூனில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை
Updated on
1 min read

சென்னையில் மின்சார பேருந்துகளை ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 5 பணி மனைகளில் இருந்து 625 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அந்த வகையில் வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 பேருந்துகள் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டு, மின்சாரப் பேருந்துகளை ஜூன் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் பணி களை விரைவுபடுத்துமாறு போக்குவரத்துத் துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையிலும், சொகுசு வசதி தேவைப்படுவோருக்கு ஏற்பவும் மின்சார பேருந்துகள் இயக்கப்படும். மின்சார பேருந்துகள் இயக்கப்படும் பணிமனையில் இருந்து டீசல் பேருந்துகளை இயக்க முடியாது. எனவே, இனி வியாசர்பாடி பணிமனையில் இருந்து மின்சார பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். இங்குள்ள பேருந்துகளை வெவ்வேறு பணி மனைகளு க்கு பிரித்து வழங்கியுள்ளோம். இது போன்ற ஏற்பாடுகள் நிறைவடைந்த பிறகு, இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைப்பார்.

போக்குவரத்து ஊழியர்கள் மது அருந்தி பணிக்கு வரக் கூடாது என தொடர்ந்து அறிவுரை வழங்குகிறோம். அவ்வாறு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வில் ‘149’ என்ற புகார் எண்ணை பயணிகள் தொடர்பு கொள்ளலாம். போக்குவரத்துக் கழக காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

கூடுதல் விலை கொண்ட மின்சார பேருந்துகளை கையாள பணியாளர்கள் இல்லாத காரணத்தால் டெண்டரில் தேர்வான நிறுவனமே பேருந்தை இயக்கும், பராமரிக்கும். இதில் அரசின் நடத்துநர்கள் பணியாற்றுவார்கள். மின்சாரப் பேருந்து வருகையால் டீசல் பேருந்து எண்ணிக்கையை குறைக்கவில்லை. பணியாளர்களையும் குறைக்கவில்லை. தனியார்மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை. மின்சாரப் பேருந்துகளில் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர், இணை மேலாண் இயக்குநர் செ.நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in