இந்திய ஒப்பந்தங்கள் ரத்து தாக்கம்: துருக்கியின் செலிபி நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால், இந்திய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, துருக்கியின் செலிபி நிறுவன பங்குகள் 20 சதவீதம் வரை சரிந்தன.

இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் சேவை, சரக்கு சேவை உள்ளிட்ட பணிகளை துருக்கியை சேர்ந்த செலிபி ஏவியேஷன் நிறுவனம் கையாண்டு வந்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையே அண்மையில் நடைபெற்ற போரின்போது பாகிஸ்தானுக்கு துருக்கி நேரடியாக ஆதரவு அளித்தது. துருக்கியின் அதிநவீன ட்ரோன்கள் மூலம் இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செலிபி ஏவியேஷன் உடனான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகிறது என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை வியாழக்கிழமை அறிவித்தது. இதன் காரணமாக துருக்கி பங்கு சந்தையில் செலிபி நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை 20 சதவீதம் வரை சரிந்தன.

துருக்கி நாட்டின் பொருளாதாரத்தில் 12 சதவீத வருவாய், சுற்றுலா துறை மூலம் ஈட்டப்படுகிறது. அந்த நாட்டுக்கு ஆண்டுதோறும் சுமார் 6.22 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சுற்றுலா செல்கின்றனர். இதில் 25 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர். போரின்போது பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளித்ததால் அந்த நாட்டை இந்தியர்கள் முழுமையாக புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். துருக்கி செல்வதற்கான முன்பதிவுகளை இந்தியர்கள் ரத்து செய்து வருவதால் அந்த நாட்டுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது.

செலிபி நிறுவனத்தின் 10 சதவித பங்குகளை சுமேயே எர்டோகன் என்பவர் தன்வசம் வைத்துள்ளார். அவரது கணவர் செல்சுக் பைரக்தர் தான் பாகிஸ்தானுக்கு ட்ரோன்களை வழங்கி உதவியுள்ளார். இதோடு, இந்நிறுவனம் டெல்லியில் விஐபி சார்ந்த விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அதை முன்வைத்து தற்போது அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1958-ல் செலிபி ஏவியேஷன் நிறுவனம் நிறுவப்பட்டது. உலக அளவில் சுமார் ஆறு நாடுகளில் உள்ள சுமார் 70 விமான நிலையங்களின் கிரவுண்ட் ஹேண்ட்லிங் பணியை இந்நிறுவனம் கவனித்து வருகிறது. சுமார் 15,000 ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in