அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிப்பு: ட்ரம்ப் முடிவுக்கு முதல்முறையாக இந்தியா பதிலடி

அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிப்பு: ட்ரம்ப் முடிவுக்கு முதல்முறையாக இந்தியா பதிலடி
Updated on
1 min read

புதுடெல்லி: குறிப்பிட்ட சில அமெரிக்கா பொருட்களுக்கான வரியை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பதவியில் அமந்த பிறகு இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான வரியை அதிரடியாக உயர்த்தினார். அதன்பிறகு, இந்தியா எடுக்கும் முதல் பதிலடி நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

உலக வர்த்தக அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை மேற்கோள்காட்டி ப்ளூம்பெர்க் மற்றும் ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பதவியில் அமர்ந்த டொனால்டு ட்ரம்ப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கான வரியை அதிரடியாக உயர்த்தினார்.

குறிப்பாக, சீன பொருட்களுக்கு அவர் 100 சதவீதத்துக்கும் மேல் வரி விதித்தார். இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களின் மீதும் அதே அளவுக்கான வரியை சீனா விதித்தது. இந்த நிலையில், அமெரிக்காவும்-சீனாவும் அண்மையில் வரிகுறைப்பு தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டன.

இந்தியா மட்டும் இதுவரை அமெரிக்க வரி விதிப்புக்கு பதிலடி தராமல் அமைதி காத்து வந்தது. இதனிடையே இருநாடுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது அமெரிக்கா உயர்த்திய அதே அளவுக்கு வரி விதிப்பை அமல்படுத்தி பதிலடி கொடுக்க இந்தியா முதல்முறையாக நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, அமெரிக்காவின் உருக்கு, அலுமினியம் உள்ளிட்ட சில பொருட்கள் மீது வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், எந்த வகையான பொருட்கள் வரி விதிப்புக்கு உட்படுத்தலாம் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறு அந்த செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in