‘இந்தியா - இங்கிலாந்து இடையே ஆயத்த ஆடை ஏற்றுமதி 10% ஆக உயரும்’

‘இந்தியா - இங்கிலாந்து இடையே ஆயத்த ஆடை ஏற்றுமதி 10% ஆக உயரும்’
Updated on
1 min read

கோவை: இந்தியா - இங்கிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் ஆண்டுதோறும் அந்நாட்டுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி 10 சதவீதமாக அதிகரிக்கும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தமிழகம் 40 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இங்கிலாந்தில் ஆண்டுதோறும் ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதம் மட்டுமே. மத்திய அரசு மேற்கொண்ட தொடர் முயற்சியால் தற்போது இந்தியா - இங்கிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய ஜவுளி தொழில்முனைவோர் கூட்டமைப்பின் (ஐடிஎப்) கன்வீனர் பிரபு தாமோதரன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியது: “இந்தியா -இங்கிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கடந்த சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதங்களாக மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டதன் பலனாக தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது.

இதனால் தொழிலாளர்களை நம்பி செயல்படும் ஜவுளி தொழில்துறைக்கு மிகவும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து ஆண்டுதோறும் 19 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயத்த ஆடைகளை பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இதில் 21 சதவீதம் சீனா, 18 சதவீதம் வங்கதேசம் பங்களிப்பை கொண்டுள்ளது. இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதமாக உள்ளது.

இதுவரை வங்கதேசத்திற்கு இறக்குமதி வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்தியாவிற்கு 12 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. தற்போது இந்தியாவிற்கும் இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்தின் ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு 10 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் 1.2 பில்லியன் டாலரில் இருந்து 2.4 பில்லியன் டாலராக வர்த்தகம் உயரும்.

தமிழ்நாட்டில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் செயல்படும் ஆயத்த ஆடை நிறுவனங்கள் நீண்ட கால அனுபவம் கொண்டு செயல்படுகின்றன. எனவே, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் இவ்விரு மாவட்டங்களை சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு மிகுந்த பயன் தரும். ஆயத்த ஆடை துறையில் முதலீடுகள் அதிகரிக்கும். இதனால் உற்பத்தியும் கணிசமாக அதிகரிக்கும். பதப்படுத்துதல் துறைக்கும் இந்த ஒப்பந்தம் பயனளிக்கும். மொத்தத்தில் ஜவுளி உற்பத்தித்துறைக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறோம்.

அடுத்து வர உள்ள ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தத்திற்கான அடிப்படையாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. உலகின் பல நாடுகள் சீனாவிடம் இருந்து கொள்முதலை குறைத்து பிற நாடுகளுக்கு வாய்ப்பு வழங்க ஆர்வம் காட்டுகின்றன. இங்கிலாந்திலும் அதே நிலை காணப்படுகிறது. இது இந்தியாவிற்கு பெரிதும் உதவும்,” என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in