ஆபரேஷன் சிந்தூர்: வட இந்தியாவில் 5 விமான நிலையங்கள் மூடல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஜம்மு: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை இந்தியா நடத்திய நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட இந்தியாவில் 5 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

அரசின் இந்த நடவடிக்கையால், ஐந்து விமான நிலையங்களிலும் விமான சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதை விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இங்கு கமர்ஷியல் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். லே, ஜம்மு, அமிர்தசரஸ், தரம்சாலா ஆகிய நான்கு விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், புஜ், ஜாம்நகர், சண்டிகர், ராஜ்கோட் உள்ளிட்ட விமான நிலையங்களில் தங்கள் விமான சேவை புதன்கிழமை (மே 7) பகல் 12 மணி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மற்றொரு விமான நிறுவனமான இண்டிகோவும் தங்கள் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

விமான சேவை பாதிப்பு குறித்து சமூக வலைதளம் மூலம் பயணிகளுக்கு விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதை பொறுத்து பயணிகள் தங்கள் வான்வழி பயணத்தை திட்டமிடலாம் என கூறியுள்ளது. டெல்லிக்கு வடக்கே விமான சேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in