இந்தியா உடனான பதற்றத்தால் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் அபாயம்: மூடிஸ்

குறியீட்டுப் படம்
குறியீட்டுப் படம்
Updated on
1 min read

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் என்று உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. மேலும், இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் மோடி வழங்கி இருக்கிறார். இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் கடும் நடவடிக்கை எடுப்பதற்கான சூழல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் தனது ராணுவத்தை உஷார்படுத்தி உள்ளது. எனினும், அதன் பொருளாதாரம் மிகவும் வலுவிழந்து உள்ளது. இந்தியா உடனான பதற்றம் காரணமாக பாகிஸ்தானின் ராணுவச் செலவினங்கள் அதிகரிக்கும் என்பதால், அதை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியில் அந்நாடு சிக்கிக் கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுடன் பதற்றம் அதிகரிப்பது பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று மூடிஸ் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாலும், பாகிஸ்தானுடனான அதன் பொருளாதார உறவுகள் சிறிய அளவிலானவை என்பதாலும் இந்தியா பெரிய பாதிப்பை சந்திக்காது என்றும் மூடிஸ் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து மூடிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவுடனான பதற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பது பாகிஸ்தானின் வளர்ச்சியைப் பாதிக்கும். அந்நாட்டு அரசின் தற்போதைய நிதி ஒருங்கிணைப்பை இந்தப் பதற்றம் தடுக்கும். இது, பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் பாகிஸ்தானின் முன்னேற்றத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்.

பாகிஸ்தானின் பொருளாதாரக் குறியீடு மேம்பட்டு வருகிறது, வளர்ச்சி படிப்படியாக அதிகரித்து வருகிறது, அந்நியச் செலாவணி இருப்பு அதிகரித்து வருகிறது. இருப்பினும், தொடர்ச்சியாக பதற்றங்கள் அதிகரிப்பது பாகிஸ்தானின் வெளிப்புற நிதியுதவிக்கான அணுகலைப் பாதிக்கக்கூடும். அதன் அந்நியச் செலாவணி இருப்புக்களை அழுத்தக்கூடும். இது அடுத்த சில ஆண்டுகளுக்கு அது செலுத்த வேண்டிய கடன் தொகையை பூர்த்தி செய்யத் தேவையானதை விட மிகக் குறைவாகவே உள்ளது.

ஒப்பீட்டளவில் இந்தியாவின் பொருளாதாரம் நிலையானதாகவே இருக்கும். வலுவான பொது முதலீடு மற்றும் ஆரோக்கியமான தனியார் நுகர்வு இருப்பதால், அதன் வளர்ச்சி தொடரும். பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தாலும், இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளில் பெரிய இடையூறுகள் ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், அது பாகிஸ்தானுடன் குறைந்தபட்ச பொருளாதார உறவுகளையே கொண்டுள்ளது.

2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் பாகிஸ்தான் 0.5 சதவீதத்துக்கும் குறைவாகவே கொண்டிருந்தது. இருப்பினும், அதிக பாதுகாப்புச் செலவு, இந்தியாவின் நிதி வலிமையைப் பாதிக்கும். அதன் நிதி ஒருங்கிணைப்பை மெதுவாக்கும்" என மூடிஸ் கணித்துள்ளது.

முன்னதாக, ஏப்.22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் வலுத்துள்ளது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in