Published : 04 May 2025 10:34 AM
Last Updated : 04 May 2025 10:34 AM
வடசென்னையில் வசிக்கும் மக்களின் வசதிக்காக, பெரம்பூர் அடுத்த பெரியார் நகர் அஞ்சலகத்தில் புதிதாக அஞ்சலக பாஸ்போர்ட் மையம் திறக்கப்பட உள்ளது.
வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம், வியாபாரம் மற்றும் சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக இந்தியாவில் இருந்து ஏராளமானோர் வெளி நாடு செல்கின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன.
சென்னையில் அமைந்தகரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் உள்ளன. இவை தவிர, அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. சென்னை நகர அஞ்சல் மண்டலத்தின் கீழ், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 8 நகரங்களில் உள்ள அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் முதலில் ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பித்து பின்னர் இங்கு சென்று நேர்காணலில் பங்கேற்க வேண்டும். சாதாரண முறையில் பாஸ்போர்ட் பெற ரூ.1,500-ம், தட்கல் முறையில் பெற ரூ.3 ஆயிரமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், வட சென்னை பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், பெரம்பூர் அடுத்த பெரியார் நகர் அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் புதிதாக திறக்கப்பட உள்ளது.
இது குறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் கூறியதாவது: பல்வேறு தேவைகளுக்காக பாஸ்போர்ட் கோரி தினமும் ஏராளமானோர் விண்ணப்பிக்கின்றனர். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் உள்ளன. இவைதவிர, அஞ்சலகம் சார்பிலும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
சென்னை நகர மண்டலத்தின் கீழ், முதன்முதலாக கடந்த 2017ம் ஆண்டு வேலூர் தலைமை அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டது. பின்னர், 2018-ம் ஆண்டு விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையிலும், 2019ம் ஆண்டு ராணிப்பேட்டை மற்றும் ஆரணியிலும், 2019ம் ஆண்டு சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரிலும் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டன.
இந்த சேவை மையங்கள் மூலம் இதுவரை 34.87 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில், அதாவது, 2024 ஏப்.1ம் தேதி முதல் இதுவரை 65,327 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையில் பெரம்பூர் அடுத்த பெரியார் நகர் அஞ்சலகத்தில் புதிதாக பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்பட உள்ளது. மத்திய அரசு இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது. அடுத்த 2 மாதங்களுக்குள் இந்த பாஸ்போர்ட் சேவை மையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும், இந்த மையத்தில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
வடசென்னை, மேற்கு சென்னை மற்றும் சென்னையை ஒட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப் பூண்டி, ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இந்த மையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT