Last Updated : 19 Jul, 2018 08:48 AM

 

Published : 19 Jul 2018 08:48 AM
Last Updated : 19 Jul 2018 08:48 AM

பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயன் பெற்றது காப்பீட்டு நிறுவனங்களே: மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள பயிர் காப்பீட்டுத் திட்டத்தால் விவசாயிகள் பயன் பெற்றதை விட அதிக அளவில் பயனடைந்தது காப்பீட்டு நிறுவனங்கள்தான். இத்தகவலை மத்திய விவசாய அமைச்சகமே தெரிவித்துள்ளது.

காப்பீட்டு நிறுவனங்களின் லாபம் 85 சதவீதம் உயர்ந்துள்ளது. செலவினங்கள், நிர்வாக செலவுகள் போக மறு காப்பீட்டு திட்டத்தால் 2017-18-ம் நிதி ஆண்டில் நிறுவனங்கள் அதிக அளவில் ஆதாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மொத்தம் 17 காப்பீட்டு நிறுவனங்களுக்கு பயிர் காப்பீடு வழங்கும் உரிமை அளிக்கப்பட்டது. பிரதம மந்திரி பாசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் இந்நிறுவனங்களுக்கு பயிர் காப்பீடு பிரீமியம் தொகையாக ரூ. 17,796 கோடி செலுத்தப்பட்டது. நிறுவனங்கள் இழப்பீடாக வழங்கிய தொகை ரூ. 2,767 கோடியாகும்.

நிறுவனங்களுக்கு கிடைத்த தொகை ரூ. 15,029 கோடியாகும். 17 காப்பீட்டு நிறுவனங்களில் 5 பொதுத்துறை நிறுவனங்களாகும். 12 தனியார் காப்பீட்டு நிறுவனங்களாகும்.

பிரதமர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு சேவை வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சரக்கு மற்றும் சேவை வரி விலக்கும் இந்நிறுவனங்களுக்கு பொருந்தும்.

பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் நிறுவனங்களின் வருமானம் 96 சதவீதம் அதிகரித்துள்ளது. மறு காப்பீடுதிட்டத்தின் கீழ் 2017-18-ம் ஆண்டில் குறுவை சாகுபடிக்காக செலுத்தப்பட்ட பிரீமியம் தொகை ரூ. 1,694 கோடியாகும். ஆனால் இழப்பீடாக அளித்த தொகை ரூ. 69.93 கோடியாகும்.

2016-17-ம் நிதி ஆண்டில் குறுவை சாகுபடி காலத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் 44 சதவீத லாபம் ஈட்டின. மொத்தம் வசூலான காப்பீட்டு பிரீமியம் தொகை ரூ. 15,735 கோடி. விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கிய தொகை ரூ. 8,862 கோடியாகும்.

இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் (ஏஐசிஐ) பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் இணைப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனமே இத்திட்டம் மிகவும் லாபகரமானதாக உள்ளதாகவும் 2016 பிப்ரவரியில் அமல்படுத்தப்பட்ட காப்பீட்டு திட்டம் மூலம் லாபம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பருவ மழை சரிவர இருக்கும் நிலையில் காப்பீட்டு திட்டமும் லாபகரமானதாகவே இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பருவமழை சரிவர இருக்கும்போது விவசாயிகள் இழப்பீடு கோருவது குறைவாகவே இருக்கும். சில சமயங்களில் பருவ மழை அதிகம் பெய்து வெள்ள பாதிப்பால் பயிர்கள் நாசமடைவது, கடும் வறட்சி போன்ற காலங்களில் மட்டுமே இழப்பீடு கோருவது அதிகமிருக்கும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு வேளை இழப்பீடு அதிகம் தர வேண்டியிருக்கலாம் என்பதற்காக மறு காப்பீடு செய்துகொள்ளும். இதன் மூலம் இழப்பீட்டு அளவு அதிகரிக்கும்போது அதை ஈடு செய்ய உதவியாக இருக்கும். விவசாய நடவடிக்கைகள் பொதுவாக கணிக்க முடியாதவை. இருப்பினும் காப்பீடு மூலம் அதிகம் பயனடைவது நிறுவனங்கள்தான் என்று வேளாண் அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 3,31,96,239 விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கோரிய இழப்பீட்டு தொகை ரூ.2,767 கோடியாகும்.

ஆனால் இழப்பீடு கோரியதாக கணக்கு காட்டப்பட்ட தொகை ரூ. 5,052 கோடியாகும். இழப்பீட்டு தொகையை கால தாமத மாக அளிப்பதன் மூலமும் நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x