Published : 01 May 2025 12:57 AM
Last Updated : 01 May 2025 12:57 AM
புதுடெல்லி: ரஷ்யா-உக்ரைன் போர், அமெரிக்க அதிபரின் நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள வர்த்தக போர் உள்ளிட்டவற்றின் காரணமாக தங்ககத்தின் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2024-25 நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 57.5 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. இது, கடந்த 2017 டிசம்பரிலிருந்து ஒப்பிடும்போது இரண்டாவது மிகப்பெரிய அளவாகும்.
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாகவும், தங்க கையிருப்பில் 7-வது இடத்திலும் இந்தியா உள்ளது. உலக தங்க கவுன்சிலின் புள்ளிவிவரப்படி, கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தின் அளவு 6.86 சதவீதத்திலிருந்து (2021) 11.35 சதவீதமாக (2024) உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் கரன்சி மதிப்பை நிலை நிறுத்தவும், பணவீக்கத்தை நிர்வகிக்கவும், பொருளாதார பாதிப்புகளை தாங்கவும் அந்நியச் செலாவணி கையிருப்பு என்பது மிக அவசியமானதாக உள்ளது.
கடந்த 2019-20-ம் நிதியாண்டில் 653 டன்னாக இருந்த இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கத்தின் கையிருப்பு 2025 மார்ச்சில் 880 டன்னாக உயர்ந்துள்ளது. வெறும் ஐந்தே ஆண்டுகளில் தங்க கையிருப்பானது 35 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT