Published : 28 Apr 2025 07:12 AM
Last Updated : 28 Apr 2025 07:12 AM
புதுடெல்லி: "மனைவிகள் எப்போதுமே புத்திசாலிகள்" என தனது மனைவியின் அனுபவங்களை பகிர்ந்து ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
சமூக வலைதளத்தில் பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருவதால் ஹர்ஷ் கோயங்காவுக்கு பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த முறை அவர் தனது மனைவியின் தனிப்பட்ட கதைகளை பகிர்ந்து மனைவிகள் எப்போதுமே புத்திசாலிகள் என்று தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தங்கத்தின் நீண்ட கால ஈர்க்கக்கூடிய மதிப்பு என்ற தலைப்பில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கார், இன்ப சுற்றுலா, ஸ்மார்ட்போன் போன்றவற்றை வாங்குவதற்கும் தங்கம் வாங்குவதற்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டியுள்ளார்.
நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 லட்சத்தில் கார் ஒன்றை வாங்கினேன். ஆனால், எனது மனைவி அதே மதிப்புக்கு தங்கத்தை வாங்கினார். இப்போது காரின் மதிப்பு ரூ.1.5 லட்சம். எனது மனைவி வாங்கிய தங்கத்தின் மதிப்பு ரூ.32 லட்சம் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, நான் சுற்றுலா செல்லலாம் என்ற போது எனது மனைவி, “ சுற்றுலா சென்றால் 5 நாட்கள் மட்டுமே இன்பம் கிடைக்கும். ஆனால், அந்த பணத்தில் தங்கத்தை வாங்கினால் அதன் பயன் 5 தலைமுறை நீடித்திருக்கும்" என்றார்.
இன்னொரு எடுத்துக்காட்டு, நான் ரூ.1 லட்சத்துக்கு போன் வாங்கியபோது, எனது மனைவி தங்கம் வாங்கினார். தற்போது நான் வாங்கிய போன் மதிப்பு ரூ.8 ஆயிரம். எனது மனைவி வாங்கிய தங்கத்தின் மதி்ப்பு ரூ.2 லட்சம். எனவே தான் சொல்கிறேன் மனைவிகள் எப்போதும் புத்திசாலிகள்.
அவர்கள் நீண்ட கால தேவையின் அடிப்படையில் தி்ட்டமிடுபவர்கள் என தனது எக்ஸ் பதிவில் கோயங்கா தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவை 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதுடன், 15,000-க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT