வீடு கட்டும் நடுத்தர மக்கள் தவிப்பு - ஜல்லி, எம்.சாண்ட் விலையால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

கோவை: தமிழகத்தில் ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான பணிகளுக்கு திட்ட செலவு 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் புதிதாக வீடு கட்டும் நடுத்தர மக்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கருங்கல் குவாரிகள் உள்ளன. இதை சார்ந்து தமிழக அரசு அனுமதியுடன் 400-க்கும் மேற்பட்ட எம் சாண்ட் தயாரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு கன மீட்டருக்கு ரூ.90 என்ற அளவில் விதிக்கப்பட்டுவந்த ராயல்டி, இப்போது டன் என்ற புதிய அளவில் விதிக்கப்படுகிறது. இதனால் கன மீட்டருக்கு ராயல்டி இப்போது ரூ.160 ஆக உயர்ந்துவிட்டது.

இதையடுத்து, கனிம நில வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலையை உயர்த்திக்கொள்வதற்கு கல் குவாரிகள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் போராட்டம் திரும்ப பெறப்பட்டது. அதன்பேரில் ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வு கடந்த வாரம் முதல் அமலுக்கு வந்தது.

யூனிட் ஜல்லி விலை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், எம்.சாண்ட் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாகவும், பி.சாண்ட் விலை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுகுறித்து, கிரடாய் அமைப்பின் கோவை பிரிவு துணைத் தலைவர் அபிஷேக் கூறியதாவது: “கோவை நகரத்தில் அதிகமான ஐ.டி. நிறுவனங்கள், பணியிட பகிர்வு மையங்கள் (கோ ஒர்கிங் ஸ்பேஸ்), அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகளவில் உருவாகி வருகின்றன.

கட்டுமானத்துக்கு தேவையான எம்.சாண்ட் விலை மட்டும் கடந்த 8 மாதங்களில் 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுமான டெவலப்பர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. அதேபோல தனியாக புதிய வீடுகளை கட்டுபவர்களும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் வீடு கட்டுவதற்கான செலவு என்பது 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. வீடு கட்ட ஒரு சதுர அடி ரூ.2000 வரை இருந்தது. இப்போது ஒரு சதுர அடிக்கு ரூ.2300 ஆக செலவு அதிகரித்துள்ளது.

கோவையில் புறவழி சாலை, மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது அரசுக்கும் கூடுதல் செலவை தரும். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் இருப்பது போல, கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த கட்டுமான பொருட்களுக்கான ஒழுங்குமுறை ஆணையத்தை ஏற்படுத்துவது அவசியமாகும்.

தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு அதிகளவில் ஜல்லி, எம்.சாண்ட் ஆகிய கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை அரசு முறைப்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in