Published : 23 Apr 2025 04:38 PM
Last Updated : 23 Apr 2025 04:38 PM
புதுடெல்லி: இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப். 22) சவுதி அரேபியாவுக்குச் சென்றார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து அவர் தனது இரண்டு நாள் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு இன்று அதிகாலை தாயகம் வந்தடைந்தார்.
இந்நிலையில், பிரதமரின் சவுதி அரேபியா பயணத்தால் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்த பட்டியலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு கூட்டாண்மைக் குழுமத்தின் இரண்டாவது கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் ஆகியோரது கூட்டுத் தலைமையில் ஏப்ரல் 22-ம் தேதி ஜெட்டாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், கலாச்சாரம், மக்கள் தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இருநாடுகளைச் சேர்ந்த துணைக் குழுக்கள் மற்றும் பணிக்குழுக்களின் பணிகள் குறித்தும் இந்தக் குழுமம் மதிப்பாய்வு செய்தது. கூட்டத்தின் இறுதியில், மேற்கொள்ளப்பட்ட குறிப்புகளில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
பாதுகாப்புத்துறையில் கூட்டுப் பயிற்சிகள், தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு போன்ற உறவுகள் கடந்த சில ஆண்டுகளில் வலுவடைந்துள்ளதைக் குறிக்கும் வகையில், பாதுகாப்புக்கான புதிய அமைச்சரவை கமிட்டியை நியமிக்க கூட்டுக் குழுமம் முடிவு செய்தது.
இரு நாடுகளுக்கும் இடையேயான கலாச்சாரம் மற்றும் மக்கள் தொடர்பு ஆகிய துறைகளில் பரஸ்பரம் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், சுற்றுலா, கலாச்சார ஒத்துழைப்புக்கான புதிய அமைச்சரவை குழுவை உருவாக்குவது எனவும் இந்த கவுன்சில் முடிவு செய்தது.
இந்தியா-சவுதி அரேபியா இடையேயான கூட்டுக் குழுமத்தின் கீழ் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை: (1) அரசியல், தூதரக மற்றும் பாதுகாவல் ஒத்துழைப்புக் குழு. (2) பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு. (3) பொருளாதாரம், எரிசக்தி, முதலீடு மற்றும் தொழில்நுட்பக் குழு. (4) சுற்றுலா மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக் குழு.
முதலீட்டுக்கான உயர்மட்ட பணிக்குழு: எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல்ஸ், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், நிதிசார் தொழில்நுட்பம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, மருந்துகள், உற்பத்தி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீடு செய்ய சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் இரண்டு சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுவதற்கு இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. வரிவிதிப்பில் முதலீட்டுக்கான உயர்மட்ட பணிக்குழு அடைந்துள்ள முன்னேற்றம் எதிர்காலத்தில் அதிக அளவிலான முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பட்டியல்: விண்வெளி, சுகாதாரம், ஊக்கமருந்து தடுப்பு, போன்ற துறைகளில் பரஸ்பரம் இருநாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சவுதி அஞ்சல் கழகம், இந்தியத் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறை ஆகியவற்றுக்கு இடையே தரைவழி அஞ்சல் மற்றும் பார்சல் போன்ற நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT