Published : 23 Apr 2025 04:41 AM
Last Updated : 23 Apr 2025 04:41 AM
சென்னை: தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று பவுனுக்கு ரூ.2,200 அதிகரித்து ரூ.74,320-க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்தை நெருங்குவதால் பொதுமக்கள் கவலைக்குள்ளாகி உள்ளனர்.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு தங்கம் விலை ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த 14-ம் தேதி ஒரு பவுன் ரூ.69,760-க்கு விற்பனையானது.
பின்னர், படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் ரூ.275 அதிகரித்து ரூ.9,290-க்கும், பவுன் ரூ.2,200 அதிகரித்து ரூ.74,320-க்கும் விற்பனையானது. இதேபோல, 24 காரட் சுத்த தங்கம் ரூ.81,072-க்கு விற்பனையானது.
இதுகுறித்து நகை வியாபாரிகள் கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தகப் போரை அறிவித்ததில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு மட்டுமின்றி, நகை வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்தவர்கள், அந்த எண்ணத்தை தள்ளிவைத்துள்ளனர்.
விலை குறைந்த பிறகு வாங்கலாம் என்று கருதுவதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் வைத்திருப்பவர்கள் மட்டுமே தற்போது குறைந்த அளவு நகைகள் வாங்குகின்றனர். வரும் 30-ம் தேதி அட்சய திருதியையை முன்னிட்டு பலர் தங்கம் வாங்க முன்கூட்டியே முன்பதிவு செய்வது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு தங்கம் விலை அதிகரித்துள்ளதால், முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அதேநேரத்தில் வெள்ளி விலை நேற்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,11,000-ஆக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT