தங்கம் விலை உயர்வு: கோவையில் 100-ல் இருந்து 40 கிலோவாக குறைந்தது தினசரி வணிகம்

படம்: மெட்டா ஏஐ
படம்: மெட்டா ஏஐ
Updated on
1 min read

கோவை: தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால் கோவையில் தினசரி வணிகம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், ஒரு லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பின் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு நினைத்த அளவுக்கு தங்க நகைகளை வாங்க முடியாமல் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிரமப்படுகின்றனர்.

மத்திய அரசு தங்கத்தின் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.5 ஆயிரம் வரை விலை குறைந்தது. இருப்பினும் உலக சந்தை நிலவரத்துக்கேற்ப தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இன்று (ஏப்.22) ஒரு சவரன் (எட்டு கிராம்) தங்கத்தின் விலை ரூ.74,320 ஆக உயர்ந்தது. இந்த விலை உயர்வால் கோவையில் தங்க நகை வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது: “தங்கத்தின் விலை உயர்வு காரணமாக கோவையில் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்ற ஒரு லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முன் கோவையில் தினமும் 200 கிலோ அளவில் தங்க நகை வணிகம் நடைபெற்று வந்தது.

2020-க்கு பின் 100 கிலோவாக குறைந்தது. தற்போது தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் கோவையில் தினசரி தங்க வணிகம் 40 கிலோவாக குறைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் சிறிய அளவிலான நகைகள் தோடு, மோதிரம், செயின் போன்றவற்றை மட்டுமே வாங்கி செல்கின்றனர். ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை தாண்டும் என வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் நாட்களில் தங்க நகை தொழில் மேலும் நலிவடையும்.” என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in