ஒரு பவுன் ரூ.74,320-க்கு விற்பனை: தங்கம் விலையில் புதிய உச்சமும் காரணமும்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சமாக இன்று (ஏப்.22) பவுனுக்கு ரூ.2,200 அதிகரித்து ஒரு பவுன் ரூ.74,320-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும் விற்பனை.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. உலக அளவில் தங்கத்துக்கு டிமாண்ட் அதிகம் உள்ளது. அதன் காரணமாக சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதன் விலை ஏற்ற இறக்குத்துடன் இருப்பது வழக்கம். இருப்பினும் இந்தியாவில் அண்மையில் வரலாறு காணாத வகையில் புதிய விலை உச்சத்தை எட்டி வருகிறது.

அந்த வகையில் இன்று (ஏப்.22) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.275 என ஏற்றம் கண்டுள்ளது. தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.74,320 மற்றும் ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கு விற்பனை ஆகிறது.

காரணம் என்ன? - தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடங்கிய வர்த்தக போர் தற்போது சீனாவுக்கு எதிராக தீவிரமடைந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை பாதுகாக்கும் நோக்கில் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்கின்றனர்.

மேலும், பங்குச் சந்தை, அரசு பத்திரங்கள், கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட மற்ற முதலீடுகளில் நிலையற்ற தன்மை காணப்படுவதாலும், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இத்தகைய காரணங்களால், தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது.

வரும் நாட்களில் தங்கம் விலை சற்று குறைந்தாலும், மீண்டும் அதிகரிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.90 ஆயிரம் வரை அதிகரிக்கும். அடுத்த ஆண்டு ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையாகவும் வாய்ப்பு உள்ளது” என்றார்.

வரும் 30-ம் தேதி அட்சய திருதியை என்பதால், பலரும் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in