ரூ.71,000-ஐ தாண்டிய தங்கம் விலை: வரலாறு காணாத புதிய உச்சம் ஏன்?

படம்: மெட்டா ஏஐ
படம்: மெட்டா ஏஐ
Updated on
1 min read

சென்னை: தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.71,000-ஐ கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,600 அதிகரித்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் கடந்த ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு பவுன் விலை கடந்த மார்ச் 13-ம் தேதி 64,960, மார்ச் 31-ம் தேதி ரூ.67,600, ஏப்ரல் 1-ம் தேதி ரூ.68,080 என உச்சத்தை தொட்டது.

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை, அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. கடந்த 12-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.70,160 ஆக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, 2 நாட்களுக்கு தங்கம் விலை சற்று குறைந்தது.

ஆனால், சென்னையில் ஆபரண தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. 22 காரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8,720-க்கும், ஒரு பவுன் ரூ.69,760-க்கும் விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.95 என பவுனுக்கு ரூ.760 உயர்ந்தது. இதனால், நேற்று ஒரு கிராம் ரூ.8,815-க்கும், ஒரு பவுன் ரூ.70,520-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.9,616, ஒரு பவுன் ரூ.76,928 ஆக இருந்தது.

இன்று புதிய உச்சம்: இந்நிலையில், இப்போது புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது தங்கம் விலை. சென்னையில் இன்று (ஏப்.17) 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.105 உயர்ந்து ரூ.8,920-க்கும், ஒரு பவுன் விலை ரூ.840 உயர்ந்து ரூ.71,360-க்கும் விற்கப்படுகிறது. 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.114 உயர்ந்து ரூ.9,731 ஆகவும், பவுன் விலை ரூ.912 உயர்ந்து ரூ.77,848 ஆகவும் உள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.110 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1.10 லட்சம் ஆகவும் இருக்கிறது.

தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, “அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் அதிகரித்துள்ளதால், பெரும் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தங்கம் விலை உயர்கிறது. வரும் நாட்களிலும் இது நீடிக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in