தேசிய கடல்சார் மீனவர்கள் கணக்கெடுப்பு நவம்பர் மாதம் தொடக்கம் - நடப்பது எப்படி?

மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கடல்சார் அருங்காட்சியகம்.
மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கடல்சார் அருங்காட்சியகம்.
Updated on
1 min read

ராமேசுவரம்: இந்தியா முழுவதும் தேசிய கடல்சார் மீனவர்களின் கணக்கெடுப்பை நவம்பர் மாதம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் தொடங்குகிறது.

இந்தியாவின் முதல் மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் (cmfri) ராமேசுவரம் அருகே மரைக்காயர் பட்டினத்தில் 1947ம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது இந்தியாவிலுள்ள பல்வேறு கடலோர மாநிலங்களில் பிராந்திய மையங்களும், பிராந்திய நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. கடந்த 78 ஆண்டுகளில் இந்த ஆராய்ச்சி நிலையம் பல தனித்துவம் வாய்ந்த ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை செய்து தேசிய மற்றும் உலகளாவிய நற்பெயரினை பெற்றுள்ளது.

இந்நிலையில், மத்திய மீன்வளத் துறை அமைச்சகத்தின் சார்பாக தேசிய கடல்சார் மீனவர்களின் கணக்கெடுப்பை மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் நவம்பர் மாதம் தொடங்குகிறது. இதற்கு முன் 2016-ஆம் ஆண்டு தேசிய கடல்சார் மீனவர் கணக்கெடுப்பை மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்டது. எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 45 நாட்கள் இடைவெளியில் நாட்டிலுள்ள அனைத்து கடலோர மாநிலங்களிலும் தேசிய கடல்சார் மீனவர்களின் கணக்கெப்பு நடைபெறும்.

தமிழக அளவில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களும் இதில் அடங்கும். அந்தமான் - நிகோபர், லட்சத்தீவுகள், டாமன், டையு, புதுச்சோரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் உள்ள மீனவ கிராமங்களில் எப்.எஸ்.ஐ (FSI) இந்த பணியை மேற்கொண்டு, தரவுகளை மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்திடம் வழங்கும்.

இந்த கணக்கெடுக்கும் பணியில் மீனவ கிராமங்களில் உள்ள மீனவ குடும்பங்களை சந்தித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சித் துறையினால் பயிற்சி அளிக்கப்பட்ட முகவர்கள் மீனவர்களின் குடும்பங்கள், மீன்பிடி படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் கடல்சார் மீனவர்களின் சமூகம் மற்றும் கல்வி பற்றிய சுய விவரங்களை சேகரிக்கப்பார்கள். அதுபோல மீன்பிடி துறைமுகங்கள், மீன்பிடி இறங்குதளங்கள், மீன் பதப்படுத்தப்படும் நிலையங்கள் ஆகியவற்றின் கட்டமைப்புகள் குறித்த தகவல்களையும் இந்தக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும்.

முழுக் கணக்கெடுப்பினையும் வழிநடத்தவும் கண்காணிக்கவும் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையம் மையங்களில் உள்ள அதிகாரிகள் மேற்பார்வையிடுவார்கள். கணக்கெடுக்கபட்ட புள்ளி விவரங்கள் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு கடல்சார், மீன்வளத் துறையில் மீன்பிடிப்பிற்கான திட்டங்கள், மீன்வள மேலாண்மை, நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கொள்கைகளை உருவாக்க மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் பயன்படுத்திக் கொள்ளும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in