Published : 08 Apr 2025 06:28 PM
Last Updated : 08 Apr 2025 06:28 PM
புதுடெல்லி: முத்ரா திட்டத்தின் கீழ் 52 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் இது உலக அளவில் இணையற்ற மிகப்பெரிய சாதனை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முத்ரா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இத்திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும், நாடு முழுவதும் தொழில்முனைவை ஊக்குவிப்பதிலும் முத்ரா திட்டம் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளது. விளிம்புநிலை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த தனிநபர்களுக்கு இந்தத் திட்டம் நிதி ஆதரவை வழங்கியுள்ளது. உத்தரவாதங்கள் அல்லது விரிவான ஆவணங்கள் தேவைப்படாமல் தங்கள் சொந்தத் தொழில்களைத் தொடங்க இது அவர்களுக்கு உதவுகிறது.
முத்ரா திட்டம் அமைதிப் புரட்சியை கொண்டு வந்துள்ளது. தொழில்முனைவு குறித்த சமூக அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பெண்களுக்கு நிதி உதவி அளிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் வணிகங்களை வழிநடத்தவும் வளர்க்கவும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. கடன் விண்ணப்பங்கள், ஒப்புதல்கள் மற்றும் விரைவாக திருப்பிச் செலுத்துவதில் பெண்கள் முன்னணியில் உள்ளனர்.
முத்ரா கடன்களை பொறுப்புடன் பயன்படுத்துவதன் மூலம் தனிநபர்களிடம் ஒழுக்க நெறிமுறைகள் வலுப்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டம் சொந்த வாழ்க்கையையும், தொழில் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது பயனற்ற முயற்சிகளை ஊக்கப்படுத்துதல் ஆகியவை இதில் இல்லை. முத்ரா திட்டத்தின் கீழ் இந்திய குடிமக்களுக்கு உத்தரவாதம் ஏதும் இல்லாமல் 33 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை முன்னோடியில்லாதது. கூட்டாக செல்வந்தர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதி உதவியையும் இத்தொகை விஞ்சி நிற்கும்.
வேலைவாய்ப்பை உருவாக்கவும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் இந்த நிதியைத் திறம்பட பயன்படுத்திய நாட்டின் திறமையான இளைஞர்கள் மீது நான் அதிக நம்பிக்கை கொண்டுள்ளேன். முத்ரா திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. சாதாரண குடிமக்களின் வருமானம் அதிகரித்துள்ளது. இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு முதலீடு செய்யவும் உதவுகிறது.
இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு நிர்வாகம் இத்திட்டம் குறித்து தீவிரமாக கருத்துகளைக் கேட்டு வருகிறது. நாடு முழுவதும் பயனாளிகள் மற்றும் குழுக்களுடன் கலந்தாலோசிப்பதன் மூலம் திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன்மூலம், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அடையாளம் கண்டு, மேலும் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும்.
ஆரம்பத்தில் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை இருந்த முத்ரா கடன்களின் வாய்ப்பை விரிவுபடுத்துவதில் அரசு குறிப்பிடத்தக்க நம்பிக்கையை வெளிப்படுத்தியது. இந்த விரிவாக்கம் இந்தியக் குடிமக்களின் தொழில்முனைவோர் உணர்வு மற்றும் திறன்கள் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம் இது வலுப்படுத்தப்பட்டுள்ளது.
முத்ரா திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், சொந்தமாகத் தொழில் தொடங்கவும் நீங்கள் மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும். தனிநபர்கள் குறைந்தது ஐந்து முதல் பத்து பேரையாவது ஊக்குவித்து ஆதரவளிக்க வேண்டும். அவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் 52 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இது உலக அளவில் இணையற்ற மிகப் பெரிய சாதனை" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT