கோடிக் கணக்கில் ஜிஎஸ்டி வரி நோட்டீஸ்: முட்டை, ஜூஸ் விற்பனையாளர்கள் அதிர்ச்சி

கோடிக் கணக்கில் ஜிஎஸ்டி வரி நோட்டீஸ்: முட்டை, ஜூஸ் விற்பனையாளர்கள் அதிர்ச்சி
Updated on
1 min read

புதுடெல்லி: கோடிக் கணக்கில் ஜிஎஸ்டி வரி பாக்கி இருப்பதாக வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை பார்த்து முட்டை மற்றும் ஜூஸ் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரின்ஸ் சுமன். முட்டை விற்பனையாளரான இவருக்கு வருமான வரித் துறை ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், ரூ.50 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளதாகவும் அதற்காக ரூ.6 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2022-ம் ஆண்டு சுமன் பெயரில் பிரின்ஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம், தோல், மரம் மற்றும் இரும்பு வர்த்தம் செய்வதாகவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் பெருமளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும் அதற்கான வரியை செலுத்தவில்லை என்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுமன் கூறும்போது, “நான் ஒரு வண்டியில் முட்டைகளை விற்பனை செய்து வருகிறேன். நான் டெல்லிக்கு சென்றதும் இல்லை, நிறுவனம் தொடங்கவும் இல்லை” என்றார்.

சுமனின் குடும்ப வழக்கறிஞர் கூறும்போது, “சுமனின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை யாரோ முறைகேடாக பயன்படுத்தி உள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்திலும் வரித் துறையிலும் புகார் செய்துள்ளோம்” என்றார்.

இதுபோல, உத்தர பிரதேச மாநிலம் அலிகரைச் சேர்ந்த முகமது ரஹீஸ் பழ ஜூஸ் விற்பனை செய்து வருகிறார். இவருக்கும் ரூ.7.5 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கியை செலுத்துமாறு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதைப் பார்த்த அவரும் அவருடைய குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ரஹீஸ் கூறும்போது, “நான் பழ ஜூஸ் மட்டுமே விற்பனை செய்து வருகிறேன். நான் அவ்வளவு பணத்தை ஒருபோதும் பார்த்ததே இல்லை. எனக்கு ஏன் இதுபோன்ற நோட்டீஸ் அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து வருமான வரித் துறையில் புகார் செய்துள்ளேன். நான் ஒரு ஏழை. பொய் வழக்கில் நான் சிக்கிக் கொள்ளக் கூடாது. இதற்கு அரசு எனக்கு உதவ வேண்டும்” என்றார்.

கடந்த 2022-ல் நடந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ரஹீஸ் பெயரில் போலியாக வங்கிக் கணக்கு தொடங்கி கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in