பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - அமைச்சரவை ஒப்புதல்

Published on

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 2% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதனைத் தெரிவித்தார்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 53% அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணத் தொகை ஆகியவற்றில் 2% உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு 01.01.2025 முதல் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆகிய இரண்டும் உயர்த்தப்படுவதால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.6,614.04 கோடி கூடுதல் செலவு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 48.66 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 66.55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மின்னணு சாதனங்கள் உற்பத்தி திட்டம்: மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, மின்னணு சாதனங்களில் தற்சார்பு அடைவதை கருத்தில் கொண்டு மின்னணு சாதனங்கள் உற்பத்தி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.22,919 கோடி நிதி உதவியுடன் மின்னணுப் பொருட்கள் வழங்கல் தொடரில் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

"இந்தத் திட்டம் ரூ. 59,350 கோடி முதலீட்டை ஈர்ப்பதாக இருக்கும். இதன் மூலம் ரூ.4,56,500 கோடி மதிப்புள்ள பொருட்கள் உற்பத்தி ஆகும். இதன் மூலம் 91,600 பேருக்கு கூடுதலாக நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதுடன், ஏராளமானவர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

மத்திய அரசின் பல்வேறு முன்முயற்சிகள் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை மின்னணு தொழில் கண்டுள்ளது. 2014-15 நிதியாண்டில் ரூ.1.90 லட்சம் கோடி மதிப்பிலிருந்த உள்நாட்டு மின்னணு சாதனங்களின் உற்பத்தி 2023-24 நிதியாண்டில் ரூ.9.52 லட்சம் கோடியாக அதிகரித்தது. இதேபோல் 2014-15 நிதியாண்டில் ரூ.0.38 லட்சம் கோடியாக இருந்த மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி 2023-24 நிதியாண்டில் ரூ.2.41 லட்சம் கோடியாக அதிகரித்தது" என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு கரீஃப் பருவத்தில் (01.04.2025 முதல் 30.09.2025 வரை) ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களை நிர்ணயிப்பதற்கான உரத்துறையின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2024 காரீப் பருவத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடாக ரூ. 37,216.15 கோடியாக இருக்கும். இது 2024-25 ரபி பருவங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டைக் காட்டிலும் ரூ.13,000 கோடி கூடுதலாகும். இதனால், விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in