

எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எலான் மஸ்கின் டெஸ்லாவுடன் டாடா குழும நிறுவனங்கள் வர்த்தக கூட்டணியில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, சர்வதேச ஆட்டோமோட்டிவ் துறையின் சந்தை மதிப்பில் பாதியளவை கொண்ட நிறுவனங்களின் கூட்டணியாக இது உருவெடுத்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் செயல்பட தொடங்கினால் அதன் வர்த்தக வாய்ப்புகளை டாடா ஆட்டோகாம்ப், டாடா கன்சஸ்டன்ஸி சர்வீசஸ், டாடா டெக்னாலஜீஸ், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை நிலைநிறுத்திக் கொள்ளும்.
மேலும், இந்த டாடா குழும நிறுவனங்கள் டெஸ்லாவுடன் தங்கள் விநியோக சங்கிலி நெட்வொர்க்கில் மிக முக்கிய பங்குதாரராக இணைப்பதன் மூலம் உலகளாவிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. 2024-ம் நிதியாண்டில் அமெரிக்க மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய விநியோகங்களுக்கு அவர்கள் பங்களிக்கின்றனர்.
“ டெஸ்லா இந்தியாவில் உற்பத்தியை தொடங்கியவுடன் இங்குள்ள சப்ளையர்கள் அதன் ஆதார வாய்ப்புகளால் பெரிதும் பயனடைவார்கள்" என்று அதன் முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மின்சார கார் தயாரிப்புக்கான பல்வேறு பாகங்களை சீனா மற்றும் தைவானுக்கு வெளியிலிருந்து கொள்முதல் செய்வதை டெஸ்லா மிகவும் விரும்பத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே அந்நிறுவனம் இந்திய நிறுவனங்களுடன் பல்வேறுகட்ட பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளது.
தமிழகம், ராஜஸ்தான், குஜராத், தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் எங்கு உற்பத்தி ஆலையை அமைப்பது என்பது குறித்து டெஸ்லா தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.