

கோவை: தமிழக அரசு இந்த ஆண்டு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், கோடைக் காலத்தில் மின்தடை ஏற்படாமல் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜெயபால் கூறும்போது, "ஏற்கெனவே மூலப்பொருட்கள் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு போன்றவற்றால் தொழில் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைபடுத்தி வருகிறது.
தொழில் துறையினர் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஜூன் மாதம் வருடாந்தர மின் கட்டண உயர்வு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். ஏற்கெனவே தொழில்முனைவோர் வலியுறுத்திவரும் நிலை கட்டணம் ரத்து, சூரிய ஒளி ஆற்றல் மின் உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணம் குறைப்பு போன்றவற்றை நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
‘டாக்ட்’ மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறும்போது, "கரோனா நோய்தொற்று பரவல், அதை தொடர்ந்து மூலப்பொருட்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற நடவடிக்கைகளால் குறு, சிறு தொழில்துறையினர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்து நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். மேலும் கோடை காலத்தில் அதிகரிக்கும் மின்தேவையை பூர்த்தி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். சீரான மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
தமிழ்நாடு சூரிய ஒளி மின்உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா கூறும்போது, "தமிழகத்தில் சூரிய ஒளி மின்உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு 6,000 மெகா வாட்டை கடந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் கட்டமைப்பு மற்றும் மின்உற்பத்தி இரண்டிலும் 25 சதவீத வளர்ச்சியை சூரிய ஒளி மின் உற்பத்தித் துறை பதிவு செய்துள்ளது. எனவே, கோடை கால மின் தேவையை பூர்த்திய செய்ய சூரிய ஒளி மின் உற்பத்தி உதவும்" என்றார்.
தமிழ்நாடு மின்வாரிய கோவை மண்டல தலைமை பொறியாளர் குப்பு ராணி கூறும்போது, "கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால் மாதாந்திர பராமரிப்பு பணிக்கான மின் நிறுத்தம் கூட கோடை காலத்தில் தவிர்க்கப்பட்டு மின் விநியோகம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அதிகரிக்கும் மின் தேவையை பூர்த்தி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.