புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,440 அதிகரிப்பு

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,440 அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தங்கம் விலை கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து ரூ.64,440-க்கு விற்பனையானது. பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.65,840 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், தங்கம் விலை நேற்றும் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் இரண்டு முறை விலை அதிகரித்தது. நேற்று காலை கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.8,230-க்கும், ஒரு பவுன் ரூ.65,840-க்கும் விற்பனையானது. பின்னர், மாலை மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது.

அதன்படி, கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.8,300-க்கும், பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.66,400-க்கும் விற்பனையாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.1,440 அதிகரித்துள்ளது.

இதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.71,824-க்கு விற்பனையானது. வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.110-ல் இருந்து ரூ.2 அதிகரித்து ரூ.112-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,12,000 ஆக இருந்தது.

விலை உயர்வு குறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, “அமெரிக்கவில் பங்குச் சந்தை 1.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், பெரு முதலீட்டாளர்களின் பார்வை தங்கம் பக்கம் திரும்பி உள்ளது. எனவே, தங்கம் கொள்முதல் அதிகரித்து உள்ளது.

தங்கம் விலை உயர்வுக்கு இது காரணமாக அமைந்துள்ளது. இந்த விலை உயர்வு சில நாட்களுக்கு தொடரும்” என்றார். தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதை கண்டு நகை வாங்குவோர் கவலை அடைந்து உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in