நிலுவை ஊக்கத் தொகை எப்போது? - எதிர்பார்ப்பில் பால் உற்பத்தியாளர்கள்

நிலுவை ஊக்கத் தொகை எப்போது? - எதிர்பார்ப்பில் பால் உற்பத்தியாளர்கள்
Updated on
1 min read

திருச்சி: ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊக்கத் தொகையை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 366 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் 19,800 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பசும்பால் ரூ.35, எருமைப் பால் ரூ.45 என்ற விலையில், தினமும் 2.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் இதைவிட கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்கின்றன.

இதனிடையே, பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்தாண்டு நவம்பர் முதல் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத் தொகையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்தது. ஆனால், பல இடங்களில் இதுவரை வரவு வைக்கப்படவில்லை என பால் உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் அயிலை சிவசூரியன் கூறியது: திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, அயிலாப்பேட்டை, புங்கனூர் போன்ற வசதியான சங்கங்கள்தான் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை ஊக்கத் தொகை வழங்கியுள்ளன.

நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதம் வரை ஊக்கத் தொகை வழங்கிய சங்கங்களுக்கு, ஆவின் நிர்வாகம் இதுவரை பணத்தை வரவு வைக்கவில்லை. மாறாக, பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டாம் என்று சங்கங்களுக்கு ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தங்களது அவசரத் தேவைக்கு எளிதாக பணம் பெற்று வந்த பால் உற்பத்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் முதல் வங்கிக் கணக்கில் நேரடி வரவு வைக்கிறோம் என்று பால் உற்பத்தியாளர்களை ஆவின் நிர்வாகம் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. எனவே, ஆவின் நிர்வாகம், கர்நாடக அரசைப்போல லிட்டர் பாலுக்கு ஊக்கத் தொகையாக ரூ.5 வழங்க வேண்டும். ஊக்கத் தொகையை அந்தந்த பால் கூட்டுறவு சங்கங்களின் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்றார்.

விரைவில் வரவு வைக்கப்படும்: ஆவின் திருச்சி மாவட்ட துணைப் பதிவாளர் நாகராஜ் சிவக்குமார், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்காக கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதத்துக்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த வார இறுதியில் ஊக்கத் தொகை, அந்தந்த பால் உற்பத்தியாளர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். முறைகேடுகளை தவிர்க்கவே பால் உற்பத்தியாளர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக ஊக்கத்தொகை வரவு வைக்கப்படுகிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in