

புதுடெல்லி: உலகின் உற்பத்தி தொழிற்சாலையாகவும், தொழிலாளர் சக்தியாக இந்தியா உருவெடுத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதார அமைப்பு சார்பில் சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் ஆண்டுதோறும் மாநாடு நடத்தப்படுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பொருளாதார வல்லுநர்கள், பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் பங்கேற்கின்றனர். தாவோஸ் மாநாட்டுக்கு இணையாக, நெட்வொர்க் 7 மீடியா குரூப் சார்பில் கடந்த 2009-ம் ஆண்டில் இந்திய தலைமையத்துவ மாநாடு (என்எக்ஸ்டி) தொடங்கப்பட்டது.
இதன்படி 2025-ம் ஆண்டுக்கான இரு நாட்கள் என்எக்ஸ்டி மாநாடு டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் கனடா முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட், இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மகா கும்பமேளா: இரண்டாம் நாள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
21-ம் நூற்றாண்டு இந்தியாவை, உலக நாடுகள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் புதிய சாதனைகள் படைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய தேர்தலை நடத்தினோம். தற்போது மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்கள் குவிந்து புனித நீராடினர். இவற்றை உலக நாடுகள் வியப்புடன் பார்க்கின்றன.
இந்தியாவில் செமி கண்டக்டர் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் வரை தயாரிக்கப்படுகின்றன. எங்களது ஆயுஷ் தயாரிப்புகள், யோகா உலக அளவில் பிரபலமடைந்து உள்ளன. இந்திய சிறுதானியங்கள் உலக அங்கீகாரத்தை பெற்றுள்ளன. இந்தியாவின் மஞ்சள் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. உலகின் மஞ்சள் தேவையில் 60 சதவீதத்தை நாங்கள் பூர்த்தி செய்கிறோம். உலகின் 7-வது மிகப்பெரிய காபி ஏற்றுமதியாளராக இந்தியா மாறியிருக்கிறது. எங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள், மின்னணு பொருட்கள், மருந்துகள் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளன.
பொருளாதார வழித்தடம்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அண்மையில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டில் இந்தியா இணை ஏற்பாட்டாளராக இருந்தது. அடுத்த ஏஐ மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில் டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அப்போது இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டம் (ஐஎம்இசி) அறிவிக்கப்பட்டது. இது உலகை மாற்றி அமைக்கும் பொருளாதார வழித்தடமாக அமையும்.
சர்வதேச அரங்கில் தெற்கு நாடுகளுக்காக இந்தியா குரல் எழுப்பி வருகிறது. பருவநிலை மாறுபாட்டை எதிர்கொள்ள, இந்தியாவின் மிஷன் லைஃப் திட்டம் உலகத்துக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது. சர்வதேச சூரியசக்தி கூட்டணி, பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான கூட்டணிக்கு இந்தியா தலைமை ஏற்றிருக்கிறது.
உலகின் புதிய தொழிற்சாலையாக, புதிய தொழிலாளர் சக்தியாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. ஒரு காலத்தில் பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்தோம். இப்போது உலகின் ஏற்றுமதி மையமாக இந்தியா மாறியிருக்கிறது. உலகளாவிய விநியோகச் சங்கிலியில் நம்பகமான கூட்டாளியாக இந்தியா விளங்குகிறது. இந்திய ஆயுதங்கள், பாதுகாப்பு தளவாடங்கள் எங்களது தொழில்நுட்ப வலிமையை உலகத்துக்கு எடுத்துரைக்கின்றன. இந்திய ஆட்டோமொபைல் துறை அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகின் பெரிய வாகன உற்பத்தியாளராகவும், ஏற்றுமதியாளராகவும் உருவெடுத்திருக்கிறோம்.
1,500 சட்டங்கள் ரத்து: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுதந்திர போராட்டத்தை ஒடுக்க திரையரங்குகள், நாடகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாடக கொட்டகையில் 10 பேர் நடனமாடினால் நாடக செயல்திறன் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர். வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் வெட்டியவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுபோல சுமார் 1,500 கொடுங்கோல் சட்டங்கள் வழக்கத்தில் இருந்தன. நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளான பிறகும் ஆங்கிலேயரின் சட்டங்கள் தொடர்ந்தன. இந்த சட்டங்கள் குறித்து கான் சந்தை குழுவினரோ, லூதான்ஸ் குழுவினரோகூட கேள்வி எழுப்பவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் 1,500 வழக்கொழிந்த சட்டங்களை ரத்து செய்துள்ளோம்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரி தாக்கல் செய்வது கடினமான பணியாக இருந்தது. ஆனால் இன்று சில நிமிடங்களில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடிகிறது. சில நாட்களில் 'ரீபண்ட்' தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. வருமான வரிச் சட்டங்கள் எளிமைப்படுத்தப்பட்டு புதிய மசோதா தயார் செய்யப்பட்டு உள்ளது. தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ 12 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மக்களின் வாழ்க்கையை எளிதாக்குதல், எளிதாக வர்த்தகம் செய்தலை இலக்காக கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது.
பூஜ்ஜியத்தை உலகத்துக்கு அளித்த இந்தியா, இப்போது எல்லையற்ற கண்டுபிடிப்புகளின் பூமியாக மாறி வருகிறது. எங்களது யுபிஐ பணப்பரிவர்த்தனை உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. கரோனா பெருந்தொற்றின்போது இந்திய தடுப்பூசிகள் உலகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டன.
பாடப்புத்தகங்களைத் தாண்டி சிந்திக்கும் வாய்ப்பை தேசிய கல்விக் கொள்கை வழங்குகிறது. மாணவர்களின் அறிவியல் திறனை அதிகரிக்க
50,000 புதிய அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக மாறுவதற்கான உறுதியுடன் இந்தியா அதிவேகமாக முன்னேறி வருகிறது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.