

புதுச்சேரி: “முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் சுமுக உறவை பேண வேண்டும். அமர்ந்து சமரசம் பேசி உடன்பாடு ஏற்படுத்த வேண்டும். சேதராப்பட்டு கரசூரில் புதிய தொழிற்சாலைகளை கொண்டுவர உள்ளோம். இதன்மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுவை அரசின் தொழிலாளர் துறை சார்பில் தொழில் நல்லுறவு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி கருத்தரங்கு கூடத்தில் இன்று (பிப்.28) நடந்தது. முகாமை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்து பேசியது: “புதுவையில் சிறு, குறு தொழிற்சாலைகள் 1,500 உள்ளன. இதில் 85 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பெரிய தொழிற்சாலைகள் சில வெளியேறிவிட்டன. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சலுகை நிறுத்தம், தொழிலாளர் பிரச்சினை ஆகியவற்றால் பெரிய தொழிற்சாலைகள் வெளியேறியுள்ளன. இதனால் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது.
ஏற்கெனவே புதுவையில் விவசாய தொழில் நலிவடைந்துள்ளது. கடந்த காலங்களில் 31 ஆயிரம் ஹெக்டேராக இருந்த நிலம், தற்போது 10 ஆயிரம் ஹெக்டேராக சுருங்கியுள்ளது. இதனால் விவசாயிகளின் வேலைகளும் குறைந்துவிட்டது. எனவே, தொழிற்சாலைகள் மூலம் வேலை வழங்க வேண்டும். முதலீட்டாளர்களுக்கு எளிய முறையில் தொழில் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நம்பிக்கை வரும்.
தொழிற்சாலை தொடங்க 3 மாதங்களுக்குள் அனுமதி தராமல் அதில் சிரமம் ஏற்பட்டு, ஓராண்டு என இழுபறி இருந்தால் முதலீட்டாளர்கள் வர மாட்டார்கள். தொழில் தொடங்கவே இவ்வளவு கஷ்டம் என்றால், தொழிலை நடத்துவது எவ்வளவு கஷ்டம் என நினைத்து போய்விடுவார்கள். பொறியியல் படித்த மாணவர்கள் சாதாரண வேலைக்குக்கூட செல்கின்றனர். எல்டிசி, யூடிசி, ஊர்க்காவல் படைக்கு பொறியியல் மாணவர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதுகின்றனர். அவர்களின் பொறியியல் அறிவை பயன்படுத்த முடியாமல் போகிறது.
தொழிலதிபர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவ வேண்டும். தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் தொழில் வளர்ச்சி அடையும். இதை தொழிலதிபர்கள் கருத்தில்கொள்ள வேண்டும். இதை தொழிற்சங்கத்தினரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். வில்லியனுாரில் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட பிரச்சினை நீண்டகாலமாக நீடித்தது. எத்தனையோ முறை பேச்சுவார்த்தை நடத்தியும் நல்லுறவு ஏற்படாததால் அவர்கள் நிறுவனத்தை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். இதனால் 300 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர்.
தொழிற்சாலைக்கு வெளியே உள்ள சங்கங்களின் தலையீடும் உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் சுமூக உறவை பேண வேண்டும். அமர்ந்து சமரசம் பேசி உடன்பாடு ஏற்படுத்த வேண்டும். சேதராப்பட்டு கரசூரில் புதிய தொழிற்சாலைகளை கொண்டுவர உள்ளோம். இதன்மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்றார்.